நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரை

அடுத்த 25 ஆண்டுகள் அனைவருக்கும், அனைத்திற்குமான வளர்ச்சி என்ற இலக்குடன் மத்திய அரசு செயல்பட்டு வருவதாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார். 

பட்ஜெட் கூட்டத்தொடரையொட்டி நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் பேசிய குடியரசுத் தலைவர், நாட்டின் விடுதலைக்காக பாடுபட்ட நேதாஜி, வ.உ.சிதம்பரனார் உள்ளிட்ட சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் தியாகிகளுக்கு மரியாதை செலுத்துவதாக கூறினார்.

கொரோனா தொற்றின் மூன்றாவது அலைக்கு எதிரான போரை முழுவேகத்துடன் இந்தியா எதிர்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். சாலையோர வியாபாரிகள் முதல் தொழில் அதிபர்கள் வரை அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகையில் பல்வேறு நிதி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது என்றும்,

அடுத்த 25 ஆண்டுகள் அனைவருக்கும், அனைத்திற்குமான வளர்ச்சி என்ற இலக்குடன் அரசு செயல்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். கடந்த ஓராண்டில் வேளாண் உற்பத்தி பொருட்கள் 33 சதவிகிதம் அதிகரித்துள்ளது என்றும் 11 கோடிக்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு ஒரு லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

கற்க கசடற கற்றபின் எனும் திருக்குறள் வரிகளுக்கு ஏற்ப புதிய தேசிய கல்விக் கொள்கை கொண்டுவரப்பட்டுள்ளது என்றும் குடியரசுத் தலைவர் தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை மிகப்பெரும் உந்துகோலாக உள்ளதாகக் கூறிய குடியரசுத் தலைவர், சாலையோர வியாபாரிகளும் டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் பயன் பெற்றுள்ளனர் என்றார்.

நாடு முழுவதும் நதிகள் இணைப்பு மற்றும் சூரிய மின்சக்தி உற்பத்தியில் அரசு தனி கவனம் செலுத்தி வருகிறது என்றும் விவசாயிகள் மற்றும் மகளிருக்கு அதிகாரம் அளிப்பதில் அரசு முன்னுரிமை கொடுத்து வருகிறது என்றும் குடியரசுத் தலைவர் தெரிவித்தார்.

5 ஜி தொழில்நுட்ப சேவையை அறிமுகப்படுத்துவதில் இந்தியா முன்னணியில் இருப்பதாகக் கூறிய குடியரசுத் தலைவர், ட்ரோன் தொழில்நுட்பம் பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து துறைகளில் பயன்படுத்தப்படுகிறது என்றார்.

Exit mobile version