தமிழகத்தில் இயக்கப்பட்டு வரும் 7 சிறப்பு ரயில்கள் நாளை முதல் ஜூலை மாதம் 15ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழக அரசின் வேண்டுகோளை ஏற்று திருச்சி – செங்கல்பட்டு, மதுரை-விழுப்புரம், கோவை-காட்பாடி, அரக்கோணம்- கோவை, கோவை- மயிலாடுதுறை, திருச்சி-நாகர்கோவில் ஆகிய ரயில் தடங்களில் இயங்கி வந்த சிறப்பு ரயில்கள் வரும் 29 ம் தேதி முதல் ஜூலை 15 ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாகவும், முன்பதிவு செய்த பயணிகளுக்கு முழுப் பணமும் திரும்ப அளிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்தவர்களுக்கு வங்கிக் கணக்கில் தானாகவே பணம் திரும்ப அளிக்கப்படும் எனவும், கவுண்டர்கள் மூலம் டிக்கெட் பெற்றவர்கள் 6 மாத காலத்துக்குள், கவுண்டர்களில் பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே டாக்டர் எம்.ஜி.ஆர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புதுடெல்லிக்கு இயக்கப்பட்டு வரும் ராஜதானி சிறப்பு ரயில் மட்டும் அட்டவணைப்படி இயங்கும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.