“இசை ஊற்று” சந்தோஷ் நாராயணன் – சிறப்புப் பதிவு

1983ல் இதே மே 15ல் திருச்சியில் பிறந்த சந்தோஷ் நாராயணன், கல்லூரி படிப்பை முடித்தப் பின்னர் ஒலிப்பதிவு பொறியாளராக பணியாற்றினார். இண்டிபெண்டண்ட் இசை நிகழ்ச்சிகளில் பங்குபெற்று பல பாடல்களுக்கு இசையமைத்து வந்தார். 2012ம் ஆண்டில் வெளியான அட்டகத்தி திரைப்படத்தில் இடம்பெற்ற கானா பாடல்கள் “சந்தோஷ் நாராயணன்” என்கிற இசையமைப்பாளரை ஊரறிய வைத்தது. அதே ஆண்டில் வெளியான “பீட்சா” திரைப்படம் மூலம் கவனிக்கத்தக்க இசையமைப்பாளராக மாறினார். 2013ல் வெளியான “சூதுகவ்வும்” படத்தின் பிஜிஎம்-மும், காசு துட்டு மணி மணி பாடலும், இன்றளவும் தொடர்ந்து ரசிக்க வைக்கிறது. 2014ல் இவரது இசையில் வெளியான “குக்கூ” திரைப்படம் இவரின் பெயரை தமிழ் சினிமாவில் அழுத்தமாக பதிவு செய்தது.

அடுத்ததாக MUSICAL GANGSTER STORY என்ற அடைமொழியோடு வெளியான “ஜிகிர்தண்டா” படத்தின் பின்னணி இசையில் மிரட்டியிருப்பார். சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசைக்கென ரசிகர் கூட்டம் உருவானது “மெட்ராஸ்” படத்தின் மூலமே. இந்த படத்தின் பாடல்களிலும் சொல்லி அடித்தார்.

இதன்பிறகு “எனக்குள் ஒருவன்”, “36வயதினிலே”, “இறுதிச்சுற்று”, “காதலும் கடந்து போகும்”, “மனிதன்”, “இறைவி” என தொடர்ச்சியாக இவரது இசையில் வந்த படங்களின் பாடல்களும், பின்னணி இசையும் பெரும் வரவேற்பை பெற்றதோடு மட்டுமல்லாமல் அவரை மற்ற இசையமைப்பாளர்களிடமிருந்து தனித்து காட்டியது.

 

2016ல் பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான “கபாலி” திரைப்படத்தின் “நெருப்புடா நெருங்குடா” பாட்டால் ரசிகர்களை முறுக்கேற வைத்தார். “மாயநதி” பாடலால் உருகவும் வைத்தார். தொடர்ந்து விஜய்க்கு “பைரவா”, தனுஷுக்கு “கொடி”, மீண்டும் ரஜியுடன் “காலா” என பக்கா கமர்ஷியலாக இசையை தூவினார்.

மேயாத மான், பரியேறும் பெருமாள் போன்ற படங்கள் மூலம் தனது இசையமைப்பை மெருகேற்றிக்கொள்ளவும் சந்தோஷ் நாராயணன் தவறியதில்லை. தனது 25வது படமான வெற்றிமாறனின் “வட சென்னை” திரைப்படம், சந்தோஷ் நாராயணின் திரைப்பயணத்தின் மைல்கல். ஏற்கனவே மெட்ராஸில் கொடுத்தது போக “வடசென்னை”யின் பின்னணி இசையில் புல்லரிக்க வைத்தார்.

மாரி செல்வராஜின் “கர்ணன்” படத்தின் பாடல்கள் தனித்துவம் என்ற அடையாளத்தை பெற்றது. “ஜகமே தந்திரம்” படத்தின் ரகிட ரகிட பாடலின் வரிகள் தன்னம்பிக்கையை கொடுக்கிறது என்றால், சந்தோஷ் நாராயணனின் இசை, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, தோல்விகளால் துவண்டு கிடக்கும் உள்ளங்களில், அசாத்திய துணிச்சலை ஊற்றெடுக்க வைக்கிறது.

 

திரைப்படங்களுக்கு தொடர்ந்து இசையமைத்து வரும் நிலையில், இவரது இசையமைப்பில் உருவான “என்ஞாயி எஞ்ஞாமி” இண்டிபெண்டண்ட் பாடல், யூடியுப்பில் 200 மில்லியன் பார்வையாளர்களை கடந்து மெகா ஹிட் அடித்துள்ளது. இந்த வரவேற்பு வெறும் அதிர்ஷ்டத்தால் கிடைத்ததல்ல. ரசிகர்களின் ரசனையை துல்லியமாக எடை போட்டு, அதற்கு புதுமையான தீனி போடுவதற்காக உழைத்ததன் பலன்.

தினம் ஒரு மெட்டு பிறக்கிறதோ இல்லையோ புதுப்புது இசையமைப்பாளரை திரையுலகம் கண்டுக்கொண்டே தான் இருக்கிறது. ஆனால், அதில் ஒரு சிலர் தான் வெகுகாலம் நினைவில் நீடிக்கின்றனர். மனதை வருடும் பாடல்கள் மூலம் சந்தோஷ் நாராயணன் நிச்சயம் நம் மனங்களில் நீடித்து வாழ்வார்.

நியூஸ் ஜெ செய்திகளுக்காக பிரவீன் குமார்

Exit mobile version