`வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினார்’ – வள்ளலார் பிறந்த தினம் இன்று!

தமிழ்நாட்டில், 19-ம் நூற்றாண்டில் அவதரித்து, இன்றைய நவீன உலகத்துக்கும் ஏற்ற முற்போக்கு சிந்தனைகளை அன்றே எடுத்துரைத்து, சமரச சுத்த சன்மார்க்கம் எனும் புதிய மார்க்கத்தை கண்ட வள்ளலாரின் பிறந்த தினம் இன்று.

 

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள மருதூரில், 1823-ம் ஆண்டு அக்டோபர் 5-ம் தேதி இராமலிங்க அடிகள் பிறந்தார். இயல்பிலேயே ஆன்மீக நாட்டம் பெற்றவராக திகழ்ந்த அவர், சிறுவயதிலேயே ஆன்மிக பிரசங்கம் செய்து புகழ் பெற்றார். சென்னை கந்தகோட்டத்தில் முருகனை வழிபட்டு வந்த அவர், விரைவிலேயே உருவமற்ற அருட்பெருஞ்சோதியே கடவுள் என்று உணர்ந்தார்.

பிறப்பால் சைவ சமயத்தினராக இருந்தாலும், அனைத்து சமயங்களையும் நேசித்தார். தனது ஞானபெருக்கால் சமரச சுத்த சன்மார்க்கம் என்ற புதிய தத்துவத்தை அவர் நிறுவினார். புலால் மறுத்தல், பிறவுயிர் கொலை தவிர்த்தல், சாதி-மத-இன-மொழி பேதங்களை மறுத்தல் ஆகியவற்றை ஊர்தோறும் சென்று பிரசாரம் செய்தார்.

வள்ளலார் சமய போதகர் மட்டுமின்றி, உரையாசிரியர், கவிஞர், இதழாசிரியர், பதிப்பாளர், தீர்க்கதரிசி, சமூக சீர்திருத்தவாதி, சமூக சேவகர் என பல பரிமாணங்கள் உடையவர். இவர் இயற்றிய ஆன்மிகப் பாடல்களின் திரட்டு, ஆறு திருமுறைகளாக திருவருட்பா என்ற பெயரில் தொகுக்கப்பட்டுள்ளது.

இவர் வாழ்ந்த காலத்தில், தமிழகத்தில் பெரும் பஞ்சம் வாட்டியது. ஆங்கிலேய ஆட்சியில் தடையற்ற தானிய ஏற்றுமதியாலும், வறட்சியாலும் லட்சக் கணக்கான மக்கள் பஞ்சத்திற்கு பலியாகினர். அப்போது, ஏழை மக்களுக்கு உணவளிக்க, வடலூர் மக்களிடம் இருந்து பெற்ற நிலத்தில், அணையா அடுப்புடன் கூடிய தர்மசாலையை நிறுவினார். அங்கு, அன்று முதல் இன்று வரை இடையறாது அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.

மக்களின் அறியாமையை போக்க, சமய நல்லிணக்கம், தீண்டாமை எதிர்ப்பு போன்ற முற்போக்கு கருத்துக்களுடன், மனிதநேய ஒருமைப்பாட்டை விளக்கினார் வள்ளலார். இதற்காக வடலூரில் சத்தியஞான சபையை அவர் நிறுவினார். அங்கு அருட்பெருஞ்சோதி வழிபாட்டை புதிய வழிமுறையாக்கினார். ஐம்பது ஆண்டுகாலம் மானுட சேவையாற்றிய வள்ளலார், 1873அம் ஆண்டு ஜனவரி 30ம் நாள், தான் நிறுவிய சத்தியஞான சபையில் ஏற்றிவைத்த ஜோதியிலேயே கலந்தார்.

பசித்திரு, தனித்திரு, விழித்திரு, உயிர்களிடத்து அன்பு செய், பசிபோக்கு, தயவுகாட்டு அவற்றுக்கு மனதாலும் தீங்கு நினைக்காதே போன்ற புதிய சிந்தனைகளால், மானுட சமுதாயம் மறுமலர்ச்சி அடைய வித்திட்ட வள்ளலார், நவீன காலத்துக்கும், எதிர்காலத்திற்கும் ஏற்புடையவரே…

 

 

Exit mobile version