முந்தைய அரசுகள் சிறப்புப் பாதுகாப்புக் குழுமச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்ததால் திருத்தம் கொண்டுவர வேண்டியதாகி விட்டதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
மக்களவையில் சிறப்புப் பாதுகாப்புக் குழுமச் சட்டத் திருத்த மசோதாவை உள்துறை அமைச்சர் அமித் ஷா தாக்கல் செய்து பேசினார். அப்போது, பிரதமருக்கும், பிரதமரின் அதிகாரப்பூர்வ வீட்டில் குடியிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் சிறப்புப் பாதுகாப்புக் குழுமம் பாதுகாப்பு அளிக்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இதேபோல் முன்னாள் பிரதமருக்கும் அவரின் குடும்பத்தினருக்கும் 5ஆண்டுக்காலத்துக்குச் சிறப்புப் பாதுகாப்பு வழங்கவும் மசோதாவில் வகை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். 1998ஆம் ஆண்டு சிறப்புப் பாதுகாப்புக் குழுமச் சட்டம் கொண்டுவரப்பட்டபோது முன்னாள் பிரதமருக்கு ஓராண்டுக்காலத்துக்குச் சிறப்புப் பாதுகாப்பு அளிக்க வகை செய்யப்பட்டதாகவும், அதன் பின் பாதுகாப்பு நிலையை மதிப்பீடு செய்து எந்தக் கால வரையறையும் இன்றிப் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருவதாகவும் அமித் ஷா குறிப்பிட்டார். சோனியா, ராகுல், பிரியங்கா ஆகியோருக்கும் சிறப்புப் பாதுகாப்பு அளிக்கும் வகையில் அந்தச் சட்டத்தை முந்தைய அரசு நீர்த்துப் போகச் செய்துவிட்டதால், அதில் திருத்தம் கொண்டுவர வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக அமித் ஷா குறிப்பிட்டார்.