பள்ளிகள் திறக்க உள்ள நிலையில் சரஸ்வதி கோயிலில் சிறப்பு பூஜை

விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட உள்ளநிலையில், திருவாரூர் அடுத்த கூத்தனூர் சரஸ்வதி கோயிலில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அழைத்துச் சென்று வழிபாடு செய்தனர்.

பூந்தோட்டம் அருகில் உள்ள கூத்தனூரில் கலைகளுக்கு அதிபதியாய் விளங்கும் சரஸ்வதி தேவிக்கு என தனியாக கோயில் அமையப் பெற்றுள்ளது. இரண்டாம் ராஜராஜ சோழன், தனது அவைப் புலவர் ஒட்டக்கூத்தருக்கு இந்த ஊரை தானமாக வழங்கியதால் கூத்தனூர் என்று பெயர் பெற்றுள்ளது. இங்கு குழந்தைகளுக்கு கல்வி தோஷம் போக்கி ஞானப்பால் ஊட்டும் விதமாக சரஸ்வதி தேவி பத்மாசனத்தில் வீற்றிருந்து, கல்விச் செல்வத்தை குழந்தைகளுக்கு வழங்குவதாக மக்களிடம் நம்பிக்கை உள்ளது.

தமிழகத்தில் வரும் திங்களன்று பள்ளிகள் திறக்க உள்ளதால் ஏராளமான பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளுடன் இங்கு வந்து தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர்.

கூத்தனூர் சரஸ்வதி தேவியைத் தரிசித்தால் கல்வி செல்வம் மற்றும் சகல வித்தைகளையும் பெறலாம் என்பது ஐதீகமாக உள்ளது.

Exit mobile version