பிரதமர் நரேந்திர மோடியால் அடிக்கல் நாட்டப்படும் எய்ம்ஸ் மருத்துவனையில் அமையவுள்ள வசதிகள் குறித்து விளக்குகிறது இந்த சிறப்பு தொகுப்பு….. மதுரை தோப்பூரில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனை 750 படுக்கைகளைக் கொண்டதாக இருக்கும். அவசரகால மற்றும் விபத்துப் பிரிவில் 30 படுக்கைகளும், ஐசியு மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவில் 75 படுக்கைகளும், பன்னோக்கு உயர் சிகிச்சைப் பிரிவில் 215 படுக்கைகளும், அறுவை சிகிச்சை மற்றும் மருத்துவப் பிரிவுகள் உள்ளிட்ட சிறப்புப் பிரிவில் 285 படுக்கைகளும், ஆயுஷ் மற்றும் தனியார் வார்டுகளுக்கு 30 படுக்கைகளும் இடம்பெறும். மேலும், நிர்வாகப் பிரிவு, திறந்தவெளி அரங்கம், இரவு தங்கும் இடம், விருந்தினர் இல்லம், விடுதிகள் மற்றும் குடியிருப்பு வசதிகளும் இதில் இருக்கும்.
முதுநிலை பட்டப்படிப்பு, உயர்கல்வி, ஆராய்ச்சி போன்ற நீண்டகால திட்டங்களை செயல்படுத்துவதாகவும் மதுரை எய்ம்ஸ் அமைக்கப்படுகிறது. இதில், 100 எம்.பி.பி.எஸ் படிப்புக்கான இடங்களும், 60 செவிலியர் படிப்புக்கான இடங்களும் இருக்கும். எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமானம், செயல்பாடு, பராமரிப்பு ஆகியவை முழுவதும் மத்திய அரசால் மேற்கொள்ளப்படுகிறது.
இந்தப் பணிகள் 45 மாதங்களில் ,அதாவது 2022 செப்டம்பர் வாக்கில் நிறைவடையும். எய்ம்ஸ் அமைக்கப்படுவதன் மூலம் இந்த மண்டலத்தில் சுகாதார வசதிகளிலும், சுகாதார கல்வி மற்றும் பயிற்சியிலும் மாற்றங்கள் ஏற்படும்.