திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ள சிறப்பு சலுகை காரணமாக சில்லரை நாணயங்களை பெற்றுக் கொள்ள வங்கிகள் ஆர்வம் காட்டி வருகின்றன.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்த பிறகு பக்தர்கள் தங்கம், வெள்ளி ஆபரணங்கள், பணம் மற்றும் நாணயங்களை உண்டியலில் காணிக்கையாக செலுத்துகின்றனர். ஆபரணங்கள் மற்றும் பணம் தேவஸ்தான கருவூலத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பாதுகாக்கப்படும். பணம் தேவஸ்தானம் சார்பில் பல்வேறு வங்கிகளில் டெபாசிட் செய்யப்படும். இதில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய சில்லரை நாணயங்களை மாற்றுவதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் இருந்ததால் வங்கிகள் நாணயங்களைப் பெற்றுக் கொள்ள தயக்கம் காட்டின. இதையடுத்து வங்கி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய தேவஸ்தான நிர்வாகம், நாணயங்களுக்கு ஈடாக அதே தொகை அந்த வங்கிகளில் காப்பீடு செய்யப்படும் என்று அறிவித்தது. இதைத்தொடர்ந்து, திருப்பதி கோயிலில் இருந்து நாணயங்களை வாங்கி கொள்ள வங்கிகள் ஆர்வம் காட்டி வருகின்றன.