பாஜக தேர்தல் அறிக்கையின் சிறப்பம்சங்கள்

இந்தியாவின் பொருளாதாரத்தை முதலிடத்திற்கு கொண்டு வர வரி சீர்திருத்தங்கள் செய்யப்படும் என்று பாஜக தேர்தல் அறிக்கையில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

மக்களவை தேர்தலையொட்டி பாஜகவின் தேர்தல் அறிக்கை 75 வாக்குறுதிகளுடன் வெளியிடப்பட்டுள்ளது. தேர்தல் அறிக்கை குறித்து மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்தார்.

சிறுகுறு விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்க புதிய திட்டம் அறிவிக்கப்படும் என்றும், அவர்களுக்கான ஓய்வூதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்றும் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.விவசாயிகளுக்கு வட்டியில்லா கிரெடிட் கார்டு வசதி செய்து தரப்படும் என்று தெரிவித்த ராஜ்நாத்சிங், விவசாயிகளுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை வட்டியில்லா குறுகிய கால கடன் பெறும் வசதி ஏற்படுத்தி தரப்படும் என்று கூறினார்.

கிசான் சம்மன் நிதியாக அனைத்து விவசாயிகளுக்கும் உதவித் தொகையாக ஆண்டிற்கு 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும் கிராமப்புற விவசாய மேம்பாட்டிற்காக 25 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.இந்தியாவின் பொருளாதாரத்தை முதலிடத்திற்கு கொண்டு வர வரி சீர்திருத்தங்கள் செய்யப்படும் என்றும், நதிகளை இணைப்பதற்கு தனி ஆணையம் உருவாக்கப்படும் என்றும் ராஜ்நாத் சிங் உறுதியளித்தார்.

நாடு முழுவதும் 75 புதிய மருத்துவ கல்லூரிகள் மற்றும் 50 உயர்கல்வி நிறுவனங்கள் தொடங்கப்படும். சபரிமலையின் பாரம்பரியத்தை காக்க அனைத்து சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சிறப்பு அதிகார சட்டம் ரத்து செய்யப்படும் மற்றும் எல்லைப் பகுதிகளில் வளர்ச்சிக்கும் உள்கட்டமைப்பு வசதிகளுக்கும் முன்னுரிமை வழங்கப்படும் என்றும் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

வணிகர்களுக்கு 10 லட்சம் ரூபாய் வரை காப்பீடு வசதி செய்து தரப்படும் என்று தெரிவித்த அவர், சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான 33 சதவிகிதம் இடஒதுக்கீட்டை உறுதி செய்யும் அரசியல் அமைப்பு திருத்த மசோதா நிறைவேற்றப்படும் என்றும் குறிப்பிட்டார்.2022க்குள் அனைத்து ரயில் நிலையங்களும் மின்மயமாக்கப்படும் என்றும் பொது சிவில் சட்டம் நிறைவேற்றப்படும் என்றும் பாஜக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version