பத்தாம் வகுப்பு மாணவர்கள், பொதுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் பெற ஏதுவாக, சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில், 109 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
இது தொடர்பாக சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்வுக்கான ஹால் டிக்கெட் பெற வசதியாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் 13 ம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில், 63 வழித்தடங்களில் 109 பேருந்துகள் இயங்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. சிறப்பு பேருந்துகளில் பள்ளி மாணவர்கள் கட்டணமில்லாமல் பயணம் செய்யலாம் என்றும், ஆசிரியர்கள் பயணச்சீட்டு பெற்று பயணிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள், ஆசிரியர்கள் தவிர மற்ற பயணிகளுக்கு அனுமதி இல்லை என்றும், காலை 9 மணிக்கு புறப்படும் பேருந்துகள், மாலை 4 மணிக்கு மறுமுனையில் இருந்து புறப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக, ஒரு பேருந்தில் 24 பயணிகள் மட்டும் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.