இந்தியாவில் கடந்த ஒரு வாரமாக கொரோனாவுக்கு இணையாக, வெட்டுக்கிளிக் கூட்டங்களும் அதிக குடைச்சலை அளித்து வருகின்றன. ஆப்பிரிக்காவில் இருந்து படையெடுத்த இந்த வெட்டுக்கிளி கூட்டங்கள் பல்வேறு நாடுகள் வழியாக பயணித்து, தற்போது இந்தியாவில் தனது தாக்குதலை தொடங்கியுள்ளன. ராஜஸ்தான், பஞ்சாப், குஜராத், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் இதனால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. இவற்றை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இந்நிலையில், இந்த வெட்டுக்கிளி கூட்டங்களை கட்டுப்படுத்த 15 நவீன மருந்து தெளிப்பான்களை இங்கிலாந்திடம் இருந்து வாங்க உள்ளதாக, மத்திய வேளாண்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.15 நாட்களில் இந்த கருவிகள் வாங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்தும் பணிக்காக கூடுதலாக 55 வாகனங்களை வாங்கவும் முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ள அதிகாரிகள், தற்போது 47 கிருமிநாசினி தெளிப்பு உபகரணங்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், 200 அதிகாரிகள் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.இது தொடர்பாக பேசிய மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், பாகிஸ்தான் எல்லை வழியாக வெட்டுக்கிளி கூட்டங்கள் இந்தியாவிற்குள் நுழையவில்லை என தெரிவித்தார். மேலும், மாநில வேளாண் துறை, உள்ளூர் நிர்வாகம், எல்லை பாதுகாப்பு படை ஆகியவற்றுடன் இணைந்து வெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்தும் பணி நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.இந்த விவகாரத்தில் மத்திய அரசு அதிக அக்கறை காட்டி வருவதாக தெரிவித்த மத்திய அமைச்சர் தோமர், அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களான ராஜஸ்தான், பஞ்சாப், குஜராத், மத்தியப் பிரதேசம், உத்தரப்பிரதேசம் மற்றும் மகாராஷ்டிராவுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளதாக குறிப்பிட்டார்.தற்போது 15 மருந்து தெளிப்பான்கள் வாங்கப்படவுள்ள நிலையில், ஒரு மாதம் அல்லது ஒன்றரை மாதங்களில் மேலும் 45 கருவிகள் வாங்கப்படும் என அவர் தெரிவித்தார்.
மரங்கள், உயரமான இடங்கள் உள்ளிட்டவற்றில் ட்ரோன்கள் மூலம் கிருமிநாசினிகள் அளிக்கப்படும் எனவும், ஹெலிகாப்டர்களை பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூறினார். ட்ரோன்கள் மூலம் மருந்து தெளிக்க ஏற்கனவே 2 நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ட்ரோன்கள் மற்றும் ஹெலிகாப்டர் மூலம் பூச்சிக்கொல்லிகள் தெளிப்பது தொடர்பாக, வேளாண் துறை கூடுதல் செயலாளரின் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், 11 பிராந்திய கட்டுப்பாட்டு அறைகள் நிறுவப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். வெட்டுக்கிளிகளின் படையெடுப்பால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு தேவையான உதவிகள் செய்து தரப்படும் என தெரிவித்த அமைச்சர் நரேந்திர சிங் தோமர், தேவைப்பட்டால் நிதியுதவியும் வழங்கப்படும் என உறுதியளித்தார்.
ராஜஸ்தான், பஞ்சாப், குஜராத், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள 334 இடங்களில் சுமார் 50,468 ஹெக்டேர் பரப்பளவில் வெட்டுக்கிளிகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிற இடங்களிலும் வெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
வெட்டுக்கிளிகளை விரட்ட தேவையான அளவு மருந்து கையிருப்பு உள்ளதாகவும், ஒரு பகுதியில் வெட்டுக்கிளிகளை முழுமையாக விரட்ட 4 அல்லது 5 நாட்கள் தேவைப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.