அமைச்சர் என்பதால் சிறப்பு சலுகை ஏதும் வழங்க முடியாது என செந்தில் பாலாஜி மீது அதிருப்தி தெரிவித்துள்ள சிறப்பு நீதிமன்றம்,
போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய்த விவாகாரத்தில், வரும் ஆகஸ்ட் 6ம் தேதி, கண்டிப்பாக நேரில் ஆஜராக வேண்டுமென உத்தரவிட்டுள்ளது
தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த 2011-15ஆம் ஆண்டுகளில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த போது, போக்குவரத்து துறையில் வேலை வாங்கி வருவதாக, கூறி 81 பேரிடம் ரூ.1.62 கோடி மோசடி செய்ததாக கணேஷ்குமார், தேவசகாயம், அருண்குமார் உள்ளிட்டோர் சென்னை காவல் ஆணையரிடம் அளித்த புகார் அளித்தனர்.
இதன் அடிப்படையில், செந்தில்பாலாஜி மீது நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் மத்திய குற்றபிரிவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை சென்னை எம்.பி.-எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது
இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்திய மத்திய குற்றப்பிரிவு போலீசார், சென்னை,கரூர், திருவண்ணாமலை, கும்பகோணம் என செந்தில் பாலாஜிக்கு சொந்தமான அவரது வீடு, அலுவலகங்களில் கடந்த ஆண்டு ஒரே நேரத்தில் சோதனை மேற்கொண்டனர்.
சோதனையின் போது மோசடி நடைபெற்ற காலகட்டத்தில் வாங்கப்பட்ட சொத்து ஆவணங்கள், தங்க நகைகளின் ரசீதுகள், ஆபரணங்கள், வேலை வாங்கி தருவதாக கூறி பல்வேறு நபர்களிடம் பெற்ற சுய விபரக் குறிப்புகள், நேர்காணலுக்கான அழைப்பு கடிதங்கள், அவர்களிடமிருந்து கோடிக்கணக்கில் பெற்ற பணம் குறித்த விபரங்களின் பட்டியல் கைப்பற்றப்பட்டதாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் சார்பில் தெரிவிக்கப்பட்டது
தொடர்ந்து, எம்.பி, எம்.எல்.ஏ க்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில், மத்திய குற்றப்பிரிவு போலீசார் தற்போதைய மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி உள்ளிட்ட மோசடியில் ஈடுபட்ட 47 பேருக்கு எதிராக 6000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த நிலையில், குற்றம்சாட்டப்பட்டுள்ள அனைவருக்கும் குற்றப்பத்திரிகையின் நகல் நீதிமன்றத்தால் வழங்கப்பட்டுள்ளது
இந்த வழக்கு சிறப்பு நீதிமன்ற நீதிபதி அலிசியா முன்பு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கின் விசாரணை வரும் ஆகஸ்ட் 17 ம் தேதி முதல் தொடங்கும் என தெரிவித்த நீதிபதி,வழக்கில் இருந்து விடுவிக்க கோரி மனு தாக்கல் செயவதாக இருந்தால் 47 பேரும் ஒரே நேரத்தில் தாக்கல் செய்ய வேண்டுமெனவும், ஒவ்வொருவராக மனு தாக்கல் செய்து வழக்கு விசாரணையை காலம் தாழ்த்தக்கூடாது என உத்தரவிட்டார்.
அதே போல போக்குவரத்து துறையில், பணம் வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்ததாக அருள்மணி என்பவர் கொடுத்த புகாரில் செந்தில் பாலாஜி,அவரது நண்பர்கள் பிரபு, சகாயராஜன், அன்னராஜ் ஆகிய நால்வர் மீது பதியப்பட்ட வழக்கும் நீதிபதி அலிசியா முன்பு விசாரணைக்கு வந்தது..
குற்றப்பத்திரிகை நகல் வழங்குவதற்காக இந்த வழக்கில் செந்தில் பாலாஜியை நேரில் ஆஜராக சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில்,இன்றும் அவர் ஆஜராகவில்லை. அமைச்சர் என்பதாலும், ஏற்கனவே திட்டமிடப்பட்ட துறை சார்ந்த கூட்டம் இருப்பதாலும் இன்று ஆஜராகவில்லை என்று அவரது வழக்கறிஞர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அமைச்சர் என்பதால் நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்களிக்கவோ, சிறப்பு சலுகை வழங்கவோ முடியாது என தெரிவித்த நீதிபதி, வழக்கு விசாரணையை வரும் ஆகஸ்ட் 6ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து, அன்றைய தினம் கண்டிப்பாக செந்தில் பாலாஜி நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்
Discussion about this post