வாக்களிக்கும் மக்கள் ஊருக்கு செல்வதற்காக போக்குவரத்து கழகம் சார்பில் 2 ஆயிரத்து 350 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தமிழகத்தில் நாளை மறுநாள் மக்களவை மற்றும் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் நாளை மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் நாளை மறுநாள் தேர்தல் வாக்குப்பதிவுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை புனித வெள்ளி என்பதால் அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பொதுமக்கள் 100 சதவீதம் வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில் சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழக போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது. அதன்படி இன்று 850 பேருந்துகளும், நாளை ஆயிரத்து 500 பேருந்துகளும் சென்னை கோயம்பேட்டிலிருந்து இயக்கப்படுகின்றன.
இதேபோல வரும் 21ம் தேதி தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலிருந்தும் சென்னைக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துறை தெரிவித்துள்ளது.