பழனியில் நடைபெறும் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
வரும் 8 ஆம் தேதி தமிழகம் முழுவதும் தைப்பூசத் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்நாளில், முருக பகவானின் முக்கிய ஸ்தலங்களில் ஒன்றான பழனி கோவிலுக்கு, ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான பக்தர்கள் வருவது வழக்கம். அவர்களின் வசதிக்காக தமிழக அரசு ஆண்டுதோறும் சிறப்பு பேருந்துகளை இயக்குகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு திருவிழாவிற்காக, பிப்ரவரி 7 ஆம் தேதி சென்னையில் இருந்து 15 சிறப்பு பேருந்துகளும், திருச்சி மற்றும் திண்டுக்கல் ஆகிய ஊர்களில் இருந்து தலா 5 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவை மற்றும் மதுரை ஆகிய ஊர்களில் இருந்து தலா 4 சிறப்பு பேருந்துகளும், சேலத்தில் இருந்து 3 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளது. மேலும், காரைக்குடி, திருநெல்வேலி, செங்கோட்டை மற்றும் திருவனந்தபுரம் ஆகிய ஊர்களில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. விழா முடிந்த பின்னர், பழனியில் இருந்து சென்னை மற்றும் பிற ஊர்களுக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.