வெளி மாநிலங்களில் இருந்து வரும் பிளாஸ்டிக் பொருட்களை தடுக்க பல்வேறு துறையை சேர்ந்த அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து அரசு உத்தரவிட்டது. அதன்படி இந்த தடை உத்தரவை சென்னை மாநகராட்சி தீவிரமாக அமல்படுத்தி வருகிறது. கடந்த மாதம் வரை நடத்தப்பட்ட ஆய்வில் 200 டன்னுக்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டினை முற்றிலும் தவிர்ப்பது குறித்து மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், பிளாஸ்டிக் பயன்படுத்தியது கண்டறியப்பட்டால் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது. மாநகராட்சியிடம் அனுமதி பெறாமல் நடத்தப்படும் கடைகளாக இருந்தால் அவற்றை உடனடியாக சீல் வைக்கவும், அப்புறப்படுத்தவும் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள கடைகளில் விற்கப்படும் பிளாஸ்டிக் பொருட்களை கண்காணிக்க வார்டு ஒன்றுக்கு மூன்று பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். இந்நிலையில் வெளி மாநிலங்களிலிருந்து பிளாஸ்டிக் கொண்டு வரப்பட்டு பயன்படுத்தப்படுவதாக வந்த தகவலை தொடர்ந்து வணிவரித் துறை, காவல் துறை, மாசு கட்டுப்பாட்டு வாரியம், மாநகராட்சி உள்ளிட்ட பல்வேறு துறையை சேர்ந்தஅதிகாரிகள் அடங்கிய சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
இந்த குழு சென்னை எல்லை பகுதிகளான திருவொற்றியூர், மணலி, அம்பத்தூர், ஆலந்தூர், பெருங்குடி, சோழிங்கநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து சோதனை மேற்கொண்டு வருவதாகவும், இதுவரை 5 டன் பிளாஸ்டிக் பொருட்களளை இந்த குழு பறிமுதல் செய்துள்ளதாகவும் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.