ஈரோடு மாவட்டத்தில் குழந்தைகளுக்கு மனஅழுத்தம் ஏற்படாமல் தவிர்க்கும் வகையில், காவல் நிலையங்களில் சிறப்பு ஏற்பாடுகளை செய்ய உத்தரவிட்ட காவல் கண்காணிப்பாளருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
ஈரோடு மாவட்டத்தில், மகளிர் காவல் நிலையங்கள் உட்பட 37 காவல் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. இங்கு புகார் அளிக்க குழந்தைகளுடன் பெண்கள் வருகின்றனர். குழந்தைகளை அருகில் வைத்துக் கொண்டு பெண்களிடம் விசாரணை செய்யும்போது, அவர்களது மனது பாதிப்படையக்கூடும் என்பதை கருத்தில் கொண்டு, அதை தவிர்க்கும் விதமாக, அனைத்து காவல் நிலையங்களிலும் குழந்தைகளின் மனநிலையை மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும் என காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேஷ் உத்தரவிட்டார்.
அதன்படி, அம்மாபேட்டை காவல்நிலையத்தில் முதன்முதலாக குழந்தைகள் மகிழ்ச்சியாக விளையாடுவதற்காக பொம்மைகள் வைக்கப்பட்டுள்ளன. இதனால் அங்கு வரும் புகார்தாரர்களின் குழந்தைகள் விளையாடி மகிழ்கின்றனர். காவல் கண்காணிப்பாளரின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.