தேனி மாவட்டத்தில் குற்றச் செயல்களை தடுக்கும் வண்ணம் ரோந்துப் பணியில் தீவிரமாக ஈடுபட, ஹலோ போலிஸ் பிரிவுக்கு மேலும் 14 இரு சக்கர வாகனங்களை வழங்கி காவல் கண்காணிப்பாளர் பணிகளை தொடங்கி வைத்தார்.
தேனியில் பொதுமக்களுக்கு காவல்துறை சேவை எளிதில் கிடைக்கும் வண்ணம் ஹலோ போலிஸ் பிரிவு 38 இரு சக்கர வாகனங்களுடன் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது மேலும் 14 வாகனங்கள் வழங்கப்பட்ட நிலையில், காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் பணிகளை துவக்கி வைத்தார். இதனால் 52 வாகனங்கள் மாவட்டம் முழுவதும் செயல்படத் தொடங்கியுள்ளது. இதனால் விரைவாகவும், எளிதாகவும் காவல்துறையினரின் சேவை கிடைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.நூறு என்ற அவசர உதவி எண்ணை அழைக்கும் பட்சத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலிருந்து ரோந்து பணியில் உள்ள காவலர்களுக்கு தகவல் சென்றடையும் என்றும் இதை தொடர்ந்து உடனடியாக சம்பந்தப்பட்ட இடத்திற்கு செல்லும் காவல் துறையினர் நடவடிக்கை எடுப்பர் என்றும் கூறப்பட்டுள்ளது. இதற்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.