ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் ராகு கேது பெயர்ச்சி இன்று மதியம் 1 மணி 24 நிமிடங்களுக்கு நிகழ்ந்தது. கடக ராசியிலிருந்து மிதுன ராசிக்கு ராகு பகவான் பெயர்ச்சியானார்.
ராகு கேது பெயர்ச்சியையொட்டி, கும்பகோணத்தில் உள்ள திருநாகேஸ்வரத்தில் நாகநாதசுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டன. ராகு-கேது பெயர்ச்சியையொட்டி இன்று பகல் 12 மணியளவில் மங்கள வாத்தியம் முழங்க கடம் புறப்பாடு நடைபெற்றது. தொடர்ந்து மஞ்சள், திரவியம் போன்ற பொருட்களால் மகா அபிஷேகமும், சிறப்பு பாலபிஷேகமும் நடைபெற்றது. தொடர்ந்து தீபாராதனை செய்யப்பட்டது.
இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.நவக்கிரகங்களுள் முதன்மையானவராக திகழும் ராகு பகவான், மங்கள ராகுவாக தன்னுடைய இரு துணைவியருடன் கும்பகோணம் திருநாகேஸ்வரத்தின் நாகநாத சுவாமியான தனி சன்னிதியில் அருள்பாலித்து வருகிறார்.
இந்த கோயிலில் மூலவருக்கு பாலபிஷேகம் செய்யும்பொழுது, அந்த பால் நீல நிறமாக மாறும் அதிசயம் நிகழ்கிறது. ராகு கேது பெயர்ச்சியையொட்டி கடந்த 7ம் தேதியிலிருந்து 9ம் தேதிவரை கோயிலில் முதற்கட்ட லட்சார்ச்சனை நடைபெற்றது.