கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு சபாநாயகர் ரமேஷ்குமார் சம்மன்

நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த 2 நாட்கள் அவகாசம் அளிக்க வேண்டும் என்ற முதல்வர் குமாரசாமியின் கோரிக்கையை நிராகரித்த சபாநாயகர், மேலும் தாமதிக்க வாய்ப்பில்லை என கூறி இன்றே வாக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவித்துள்ளார்.

கூட்டணிக் கட்சிகளை சேர்ந்த 15 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ததால், கர்நாடகாவில் ஆட்சி செய்து வரும் மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு பின்னடைவு ஏற்பட்டது. பெரும்பான்மையை இழந்த முதலமைச்சர் குமாரசாமி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என பாஜக மாநில தலைவர் எடியூரப்பா வலியுறுத்தி வருகிறார். சட்டப்பேரவையில் குமாரசாமி அரசு உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டுமென ஆளுநர் இரண்டு முறை கெடு விதித்தார். அதை ஆளும் மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கூட்டணி அரசு புறக்கணித்தது. இந்தநிலையில், இன்று மீண்டும் கூடும் பேரவையில், முதலமைச்சர் குமாரசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடக் கோரி, 15 எம்.எல்.ஏ.க்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்து விட்டது. இன்றே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட முடியாது என்றும், வழக்கை நாளை விசாரிப்பதாகவும் உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. கர்நாடக அரசியலில் குழப்பம் நீடித்து வரும் நிலையில், அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் நாளை காலை 11 மணிக்கு தன்னை சந்திக்க வேண்டும் என சபாநாயகர் ரமேஷ்குமார் சம்மன் அனுப்பி உள்ளார். இதனிடையே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த 2 நாட்கள் அவகாசம் அளிக்க வேண்டும் என்ற முதல்வர் குமாரசாமியின் கோரிக்கையை நிராகரித்த சபாநாயகர், மேலும் தாமதிக்க வாய்ப்பில்லை என கூறி இன்றை வாக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவித்துள்ளார்.

Exit mobile version