மகாராஷ்டிர மாநிலம் கோலாப்பூரில் வெள்ளம் வடியத் தொடங்கியதை அடுத்துச் சென்னை – மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மீண்டும் வாகனப் போக்குவரத்து தொடங்கியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்ததால் பஞ்சகங்கா, கிருஷ்ணா ஆறுகளில் அபாய அளவைத் தாண்டி வெள்ளம் பாய்கிறது. கோலாப்பூரில் பஞ்சகங்கா ஆற்றில் பாலத்தை மூழ்கடித்து வெள்ளம் பாய்ந்த நிலையில் பாதுகாப்புக் கருதி அந்தச் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. ஆற்றில் நீர்வரத்துச் சற்றுக் குறைந்துள்ள நிலையில், பாலத்தை ஆய்வு செய்த அதிகாரிகள் லாரிகள் மற்றும் பேருந்துகள் ஆகிய கனரக வாகனங்களை இயக்க அனுமதித்தனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உணவு, குடிநீர், எரிபொருள் ஆகியவற்றைக் கொண்டு செல்வதற்காகக் கோலாப்பூரில் மும்பை – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மீண்டும் போக்குவரத்து தொடங்கியது. நெரிசலைத் தவிர்ப்பதற்காக வாகனங்களுக்குச் சுங்கக் கட்டணம் பெற வேண்டாம் எனப் பொதுப்பணித்துறை அமைச்சர் ஏக்நாத் சிண்டே உத்தரவிட்டுள்ளார்.