தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கேரளாவின் பல பகுதிகளில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கண்ணூர், மலப்புரம், காசர்கோடு பகுதிகளில் அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் மூழ்கி இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மாநிலத்தின் இடுக்கி, எர்ணாகுளம் உள்ளிட்ட 4 அணைகள் நிரம்பும் சூழலில் உள்ளதால் உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு மக்கள் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர். கனமழையின் காரணமாக இடுக்கி மாவட்டம் மூணாறில் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மாநிலம் முழுவதும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், மீட்புப்படை தயார்நிலையில் உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.