தென்மேற்கு வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதால், காஞ்சிபுரம், விழுப்புரம் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன், புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி, வரும் நாட்களில் மேற்கு, வடமேற்கு திசை நோக்கி நகரும் என்றார். இதனால், தென் தமிழகம், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழை பெய்யும் என்றும் காஞ்சிபுரம், விழுப்புரம் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் புவியரசன் தெரிவித்தார். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும், சூறைகாற்று வீசும் என்பதால், மன்னார் வளைகுடா, குமரி கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அவர் எச்சரித்தார்.