தூய்மையான நகரங்களில் பட்டியலில் தென்னிந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளது மேலத்திருப்பூந்துருத்தி பேரூராட்சி. குப்பைகளை தரம்பிரிப்பது, திடக்கழிவு மேலாண்மை உள்ளிட்டவற்றில் சிறப்பாக பணியாற்றி வரும் மேலத் திருப்புந்துருத்தி குறித்த செய்தித் தொகுப்பை தற்போது காணலாம்.
மத்திய அரசு தூய்மை இந்தியா திட்டத்தை நாடெங்கும் செயல்படுத்தி வருகிறது. ஒவ்வொரு காலாண்டிலும் தூய்மையான நகரங்களின் பட்டியல் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை சார்பில் வெளியிடப்படுகிறது.
நிகழாண்டில் 25 ஆயிரம் மக்கள் தொகை வரையிலான நகரங்கள் பிரிவில் தென்னிந்திய மாநிலங்களில் மேலத்திருப்பூந்துருத்தி பேரூராட்சி முதல் காலாண்டில் முதலிடமும், இரண்டாம் காலாண்டில் இரண்டாம் இடமும் பெற்று தென் இந்தியாவின் தூய்மையான நகரம் என சாதனை படைத்துள்ளது.
மேலும் அகில இந்திய அளவில் 149-வது இடமும் பிடித்துள்ளது. அகில இந்திய அளவில் தூய்மையான நகரங்களில் முதல் 150 நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டில் இருந்து இடம்பெறும் ஒரே நகரம் என்ற பெருமை பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பேரூராட்சியில் சேகரமாகும் குப்பைகளை வீடுகளுக்கே சென்று பணியாளர்கள் தரம் பிரித்து வாங்கி கொள்வதாகவும் குப்பைகள் தரம்பிரித்து பயன்படுத்துவதாகவும் தெரிவிக்கிறார் பேரூராட்சி செயல் அலுவலர் குகன்.
பேரூராட்சி அலுவலகத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, எவ்வித முறைகேடுகளும் இன்றி பொதுமக்களுக்கு நேர்மையான சேவையை வழங்கி வருவதாகவும், என்னென்ன வசதிகள் கிடைக்கும் என்பதை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அறிவிப்பு பலகையாக விளம்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிடுகிறார்.
துவக்கத்தில் பொதுமக்கள் போதிய ஒத்துழைப்பு தரவில்லை என்றும் நாட்கள் செல்ல செல்ல அவர்களாகவே குப்பையை தரம்பிரித்துக் கொடுத்ததாகவும் தெரிவிக்கிறார் துப்புரவு பணியாளர் ரஷ்யா
இதையெல்லாம் தூய்மை இந்தியா திட்டத்தின் அதிகாரிகள் களஆய்வு செய்து, பொதுமக்களிடம் கருத்துகளை கேட்டறிந்து, தென்னிந்திய அளவிலான தூய்மையான நகரங்களின் பட்டியலில் மேலத்திருப்பூந்துருத்தி பேரூராட்சிக்கு முதல்
காலாண்டில் முதலிடம் வழங்கினர்.
தங்களுடைய முயற்சியுடன் பொதுமக்களின் ஒத்துழைப்பு காரணமாகவே திருப்பூந்துருத்தி பேரூராட்சி முதலிடம் பிடித்ததாக பேரூராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.