பல கோடி மக்களுக்கு தேசப்பற்றை உண்டாக்கிய மகாத்மா காந்திக்கே விடுதலை உணர்வை ஊட்டியவர் தில்லையாடி வள்ளியம்மை. அவரை பற்றிய சிறிய செய்தி தொகுப்பு!
மயிலாடுதுறையை அடுத்த தில்லையாடியை சேர்ந்த நெசவுத் தொழிலாளி முனுசாமி, தென் ஆப்பிரிக்காவில் வியாபாரம் செய்து வந்தார். அவருக்கு 1898ம் ஆண்டு பிப்ரவரி 22ம் தேதி மகளாக பிறந்தார் வள்ளியம்மை. அசாத்திய துணிச்சல் நிறைந்த வள்ளியம்மை, தென்ஆப்பிரிக்காவில் இந்தியர்கள் மீதான பிரிட்டிஷாரின் அடக்குமுறையை எதிர்த்து சிறு வயது முதலே குரல் கொடுத்தார்.
தென்ஆப்பிரிக்காவில் 1913-ல் இந்தியர்களுக்கு விதிக்கப்பட்ட வரி மற்றும் பல்வேறு கொடுமைகளை எதிர்த்து காந்தியடிகள் போராட்டங்கள் நடத்தினார். 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் போராட்டக் களத்தில் நின்றிருந்த நிலையில், காந்தியைச் சுட்டுக்கொல்ல தென்னாப்பிரிக்க காவல்துறையினர் திட்டமிட்டனர்.
காந்தியை சுடுவதற்கு துப்பாக்கியை நீட்டிய போது, அதை பார்த்த, 15 வயதே ஆன வள்ளியம்மை திடீரென காந்திக்கு முன் வந்து… ‘‘இப்போது சுடுங்கள் பார்க்கலாம்’’ என்று சொல்லியதால், காவல்துறையினர் உள்ளிட்ட அனைவரும் திகைத்து நின்றனர். ‘‘வள்ளியம்மையின் நெஞ்சுரம் கண்டு என்னைச் சுடவந்த வெள்ளையனே திகைத்து, திரும்பிச் சென்றான்’’ என்று மகாத்மா காந்தியே பின்னாளில் குறிப்பிட்டுள்ளார்.
அதே போன்று, மற்றொரு போராட்டத்தில் பங்கேற்றதற்காக கைது செய்யப்பட்டு, அபராதம் செலுத்தினால் விடுதலை என்றபோது அது சத்தியாகிரகத்துக்கு இழுக்கு என துணிச்சலுடன் ஏற்க மறுத்தார். ‘சொந்தக் கொடிகூட இல்லாத நாட்டின் கூலிகளுக்கு இவ்வளவு வெறியா?’ என்று ஒரு ஆங்கிலேய அதிகாரி ஆணவத்தில் கொக்கரித்தார். கொதித்தெழுந்த வள்ளியம்மை, உடனே தனது சேலையைக் கிழித்து அவரது முகத்தில் எறிந்து ‘இதுதான் எங்கள் தேசியக் கொடி’ என்று வாயடைக்க வைத்தது, துணிச்சலின் உச்சம், இணையில்லா தேசப்பற்றின் வெளிப்பாடு.
சிறை வாழ்க்கையாலும், கடுமையாக வேலை வாங்கியதாலும், அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டது. அவரை விடுவிக்க அரசு முடிவு செய்த போது, விடுதலையாக மறுத்த வள்ளியம்மை, கோரிக்கைகள் நிறைவேறிய பின்னரே வெளியே வந்தார்.
பின்னர் சில நாட்கள் நோயுடன் போராடியவர், 1914 பிப்ரவரி 22-ம் தேதி தனது பிறந்தநாளன்றே உயிர்நீத்தார்.
‘இந்தியாவின் ஒரு புனித மகளை இழந்துவிட்டோம். அவரது இந்த தியாகம் இந்திய சமூகத்துக்கு நிச்சயம் பலன் தரும்’ என்று இரங்கல் செய்தியில் காந்திஜி குறிப்பிட்டார்.
சுதந்திரம் என்ற வார்த்தையின் முழு அர்த்தத்தை அறிந்திராத இளைய தலைமுறையினருக்கு, வள்ளியம்மையின் வாழ்க்கை என்றென்றும் பாடமாய் நிலைத்து நிற்கும் என்பது நிதர்சனமே……