இங்கிலாந்துக்கு எதிரான 20 ஓவர் போட்டியில் த்ரில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்கா

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் 20 ஓவர் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி 1 ரன்னில் த்ரில் வெற்றி பெற்று அசத்தியது.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

மூன்று 20 ஓவர் போட்டி தொடரில் முதல் ஆட்டம் கிழக்கு லண்டனில் நேற்று நடந்தது. முதலில் விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 177 ரன் எடுத்தது.

தொடக்க வீரர் பவுமா 43 ரன்களும், கேப்டன் குயின்டன் டி காக் 31 ரன்களும் , வான்டர் டூசன் 31 ரன்களும் , எடுத்தனர். ஜோர்டன் 2 விக்கெட்டும், மொய்ன் அலி, சாம் கரண், மார்க்வுட், ஆதில் ரஷீத், பென்ஸ்டோக்ஸ் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

இதையடுத்து 178 ரன் இலக்குடன் இங்கிலாந்து அணி பின்னர் களம் இறங்கியது. சிறப்பாக விளையாடிய இங்கிலாந்து அணிக்கு ஆட்டத்தின் கடைசி ஓவரில் வெற்றிக்கு 7 ரன் தேவைப்பட்டது. நிகிடி வீசிய முதல் பந்தில் சாம் கரண் 2 ரன் எடுத்தார். 2-வது பந்தில் அவர் அவுட் ஆனார். 3-வது பந்தில் மொய்ன் அலி ரன் எடுக்கவில்லை.4-வது பந்தில் 2 ரன் எடுத்தார்.இதனால் கடைசி 2 பந்தில் 3 ரன் தேவைப்பட்டது. 5-வது பந்தில் மொய்ன் அலி ஆட்டம் இழந்தார். கடைசி பந்தில் ஆதில் ரஷீத் 1 ரன் எடுத்து ரன் அவுட் ஆனார். இதனால் 1 ரன்னில் இங்கிலாந்து தோல்வியை தழுவியது.

அந்த அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 176 ரன் எடுத்தது. இதனால் பரபரப்பான இந்த ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா 1 ரன்னில் த்ரில்  வெற்றி பெற்றது.இந்த வெற்றி மூலம் தென் ஆப்பிரிக்கா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 2-வது 20 ஓவர் போட்டி டர்பனில் நாளை நடைபெறவுள்ளது .

Exit mobile version