இந்தியாவுக்கு எதிரான கடைசி இருபது ஓவர் போட்டியில் தென் ஆப்பிரிக்கா ஆணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால், 20 ஓவர் தொடர் சமனில் முடிந்தது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்கா அணி மூன்று இருபது ஓவர், 3 டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளது. தர்மசாலாவில் நடந்த முதலாவது இருபது ஓவர் போட்டி மழையால் ரத்தான நிலையில், 2வது போட்டியில் இந்திய 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தநிலையில், 3வது மற்றும் கடைசி இருபது ஓவர் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி தொடக்க வீரராக களம் இறங்கிய ரோஹித் ஷர்மாவும் அடுத்து களம் இறங்கிய கேப்டன் விராட் கோலியும் தலா 9 ரன்களில் ஆட்டமிழக்க மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் தவான் மட்டும் அதிகபட்சமாக 36 ரன்கள் குவித்தார்.
பின்னர் களம் இறங்கிய இந்திய வீரர்கள் தென்னாப்பிரிக்கா வீரர்களின் பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் சொற்ப ரன்னில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்த இந்தியா 134 ரன்கள் மட்டுமே எடுத்தது. தென்னாப்பிரிக்கா தரப்பில் ரபடா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
135 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஹென்ரிக்ஸ் 28 ரன்களில் ஆட்டமிழக்க மற்றொரு தொடக்க ஆட்டக்காரரும் கேப்டனுமான குயிண்டன் டி காக்கும், டெம்பா பவுமாவும் அதிரடியாக அணிக்கு வெற்றி தேடி தந்தனர். 16 புள்ளி 5 ஓவர் முடிவில், தென்னாப்பிரிக்கா ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 140 ரன்கள் எடுத்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
குயிண்டன் டி காக் ஆட்டமிழக்காமல் 79 ரன்களும், பவுமா 27 ரன்களும் எடுத்தனர். ஹெண்டிக்ஸ் ஆட்டநாயகன் விருதையும் தொடர்ந்து இரு போட்டிகளிலும் அரைசதம் அடித்த டி காக் தொடர் நாயகன் விருதையும் பெற்றனர். இதனால் இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான இருபது ஓவர் தொடர் 1க்கு 1 என சமனில் முடிந்தது.