வளர்ச்சியை நோக்கிப் பயணித்த தென்னாப்பிரிக்காவில் கலவரங்கள், வன்முறைகள் அதிகரித்து வருகின்றன

வளர்ச்சியை நோக்கிப் பயணித்து வந்த ஆப்ரிக்க நாடான தென்னாப்பிரிக்காவில் சமீப காலமாக கலவரங்கள், வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. அவற்றின் காரணம் என்ன? பாதிப்பு யாருக்கு?

ஆப்ரிக்க சந்தைகளின் காந்தமாக உள்ள நாடு தென்னாப்பிரிக்கா. ஆப்பிரிக்க கண்டத்தின் மிக முக்கிய வளரும் பொருளாதார நாடாக தென்னாப்பிரிக்கா உள்ளது. இதனால் ஆப்பிரிக்க கண்டத்தின் பல்வேறு நாடுகளில் இருந்தும் வரும் மக்கள் அங்கு குவிந்து வருகின்றனர். அவர்களில் நைஜீரியர்கள், எத்தியோப்பியர்களின் எண்ணிக்கை மிக அதிகம்.

இன்னொரு பக்கம் சமீபகாலமாக தென்னாப்பிரிக்காவில் வேலை இல்லாத் திண்டாட்டம் அதிகரித்து வருகின்றது. இதனால் உள்ளூர் மக்கள் தங்கள் வேலைகளை வெளிநாட்டினர் பறித்துக் கொண்டதாகக் கருதத் தொடங்கியுள்ளனர். சிறிது காலம் முன்பு தென்னாப்பிரிக்க லாரி ஓட்டுநர்கள் அயல்நாட்டுத் தொழிலாளர்களுக்கு எதிராகப் போராட்டம் ஒன்றை அறிவித்தனர், அதன் பின்னர் தென்னாப்பிரிக்காவில் உள்ள அயல்நாட்டு நிறுவனங்களுக்கு எதிரான போராட்டங்கள் வலுவடைந்தன.

அதன் பின்னர் தென்னாப்பிரிக்காவில் உள்ள அயல்நாட்டினருக்குச் சொந்தமான கடைகள், நிறுவனங்கள், சொத்துகள் ஆகியவற்றின் மீதான தாக்குதல்களும் அதிகரித்து வருகின்றன. இந்தத் தாக்குதல்களில் கலவரக்காரர்களோடு உள்ளூரில் உள்ள வேலையில்லாத மக்களும் பங்கேற்பதால் பெரிய கூட்டங்களைக் கட்டுப்படுத்த முடியாமல் தென்னாப்பிரிக்க காவல்துறை திணறி வருகின்றது.

இதுவரையிலான தாக்குதல்களினால் 12 பேர் கொல்லப்பட்டு உள்ள நிலையில், தென்னாப்பிரிக்காவின் வர்த்தக முகம் மெல்ல நிறம் மாறத் தொடங்கி உள்ளது. தென்னாப்பிரிக்காவில் பணியாற்றி வந்த அயல் நாட்டினர் பலர் தற்போது கூட்டம் கூட்டமாக தங்கள் நாடுகளுக்குத் திரும்பத் தொடங்கி உள்ளனர். இந்தக் கலவரங்கள் தொடர்பாக இதுவரை 640க்கும் மேற்பட்டவர்களை தென்னாப்பிரிக்க காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஆனாலும் கூட போராட்டங்கள் மற்றும் கலவரங்களை முழுவதுமாகக் கடுப்படுத்த முடியாத நிலையே தென்னாப்பிரிக்காவில் நீடிக்கிறது.

Exit mobile version