உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 5 வது லீக் போட்டியில் முதலில் பேட் செய்த வங்கதேச அணி தென் ஆப்பிரிக்காவுக்கு 331 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.
12 வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதன் 5 வது லீக் போட்டியில் மோர்தசா தலைமையிலான வங்கதேச அணியும் டூப்ளிசிஸ் தலைமையிலான தென் ஆப்பிரிக்கா அணியும் மோதி வருகின்றன. இங்கிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்காவும், இந்தியாவுடனான பயிற்சி ஆட்டத்தில் வங்கதேசமும் தோல்வி கண்ட நிலையில், முதல் வெற்ரியை பெற இரு அணிகளும் தீவிரம் காட்டி வருகிறது. லண்டனில் நடைபெற்று வரும் இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி வங்கதேசத்தை பேட் செய்ய பணித்தது. அதன்படி தொடக்க வீரர்களாக களம் இறங்கிய தமீம் இக்பாலும் 16 ரன்களிலும், அதிரடியாக விளையாடிய சவும்யா சர்கார் 46 ரன்களிலும் ஆட்டமிழந்த நிலையில், அடுத்து களம் இறங்கிய ஷகிப் அல் ஹசன் மற்றும் முஷ்ஃபிகுர் ரஹிம் இணை தென் ஆப்பிரிக்காவின் பந்து வீச்சை திறம்பட எதிர்கொண்டு 3 வது விக்கெட்டுக்கு 142 ரன்கள் குவித்தனர்.
ஷகிப் அல் ஹாசன் 75 ரன்களிலும் அதிரடியாக விளையாடிய முஷ்ஃபிகுர் ரஹிம் 78 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். தொடர்ந்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்திய வங்கதேச வீரர்களின் கணிசமான பங்களிப்பால் அந்த 6 விக்கெட்டுகளை இழந்து 330 ரன்கள் என்ற வலுவான இலக்கை எட்டியது. தென் ஆப்பிரிக்க தரப்பில் இம்ரான் தாஹிர், கிறிஸ் மோரீஸ், அண்டில் ஃபிலுக்வயோ ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதனால் தெனாப்பிரிக்காவுக்கு 331 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.