BCCI தலைவராக இன்று பொறுப்பேற்றார் சவுரவ் கங்குலி

பிசிசிஐ-யின் ஆண்டு பொதுக் குழுக் கூட்டம் மும்பையில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் பிசிசிஐ-யின் 39வது தலைவராக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி பொறுப்பேற்றார்.

 

பிசிசிஐ செயல்பாடுகளை வெளிப்படையாக நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி லோதா தலைமையிலான குழு ஒன்றை உச்சநீதிமன்றம் நியமித்தது. இரட்டை ஆதாய பதவி, கிரிக்கெட் ஆலோசனைக் குழு போன்ற பல்வேறு பிரச்சனைகளை இக்குழு கண்காணித்து வந்தது. மேலும் அனைத்து மாநில கிரிக்கெட் சங்கங்களில் புதிய சட்டவரையறை படி நிர்வாகிகள் தேர்தல் நடத்தப்பட்டன.

இந்நிலையில் பிசிசிஐ நிர்வாகிகள் தேர்தல் அக்டோபர் 23ந் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. பிசிசிஐ தலைவர் பதவிக்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி மட்டுமே தாக்கல் செய்திருந்தார். இதனையடுத்து, பிசிசிஐ தலைவர் பதவிக்கு கங்குலி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

பிசிசிஐ செயலாளர் பதவிக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மகன் ஜெய் ஷா உட்பட பலர் பிசிசிஐ நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர். இதனையடுத்து பொதுக்குழுக் கூட்டத்தில் பிசிசிஐ தலைவர் பதவியை சவுரவ் கங்குலி இன்று ஏற்றார். அவருடைய பதவிக்காலம் 10 மாதங்களே ஆகும்.

Exit mobile version