அதிநவீன வசதிகள் கொண்ட மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் சக்கர நாற்காலிகள் 2000 பேருக்கு விரைவில் வழங்கப்படும் என சமூகநலத்துறை அமைச்சர் சரோஜா கூறியுள்ளார்.
மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு தேவைப்படும் சிறப்பு கவனத்தை விரைவாக கண்டறிதல் என்ற தலைப்பில் அமர் சேவா சங்கத்தின் சர்வதேச மாநாட்டின் முன்னோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா கலந்துகொண்டார். அப்போது நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் சரோஜா இந்த சமுதாயத்தில் மாற்றுத்திறனாளிகள் சமமாக நடத்தப்பட வேண்டும் என்பதற்காகவும் மாற்றுத் திறனாளிகளின் நலனுக்காகவும் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக குறிப்பிட்டார். அதிநவீன வசதிகள் கொண்ட மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் சக்கர நாற்காலிகள் 2000 பேருக்கு விரைவில் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். 2019-2020 ஆம் நிதியாண்டில் மட்டும் 572 கோடி ரூபாய் மாற்றுத்திறனாளிகள் துறைக்கு தமிழக அரசு ஒதுக்கியுள்ளதாகவும், மாற்றுத் திறனாளிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய ஆதரவு இல்லம் வைத்து நடத்துவோர் முறையான உரிமம் பெற்று பதிவு செய்தால் மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்றும் கூறியுள்ளார். இந்த நிகழ்ச்சியில், அரசு அதிகாரிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.