மூளையின் செயல்பாடுகளை கண்காணிக்கவும், அதன் இயக்கத்தை கட்டுப்படுத்தும் வகையிலும் புதுவகை கருவியை அமெரிக்காவைச் சேர்ந்த தனியார் நிறுவனம் வடிவமைத்துள்ளது …
மனிதனின் உடல் இயக்கம் அனைத்தையும் கட்டுப்படுத்தும் பாகம் மூளை.லட்சக்கணக்கான பின்னிப் பிணைந்த நரம்புகளைக் கொண்ட மூளையில், ஏற்படும் சிறிய பாதிப்பும் மனிதனின் இயக்கத்தை பாதிக்கிறது. மூளையில் ஏற்படும் பாதிப்புகள் பெரும்பாலானவை நவீன மருத்துவ உலகத்தினால் குணப்படுத்த முடியாதவையாகவே உள்ளன
இத்தகைய நோய்களை குணப்படுத்துவதற்கான அதிநவீன கருவி ஒன்றை தயாரித்துள்ளது அமெரிக்க அறிவியல் தொழில்முனைவோரும், பணக்காரருமான இலான் மஸ்க்-கின் நிறுவனமான நியூராலிங்க். அதிநவீன சிப்களைக் கொண்ட இந்தக் கருவியை மூளைக்குள் பொருத்தும் போது, மூளையின் செயல்பாடுகள் கண்காணிக்கப்பட்டு, அத்தகவல்கள் வெளியில் உள்ள கணினியில் பதிவு செய்யப்படும்
இந்தக் கருவியை பன்றியின் மூளையில் பொருத்திய இலான் மஸ்க், பொதுமக்கள் முன்னிலையில் பரிசோதித்து காட்டினார். சிப் பொருத்தப்பட்ட பன்றிகள், உணவின் வாசனையை நுகர்ந்த போது ஏற்பட்ட மின் அதிர்வுகளை சிப்பில் உள்ள கருவி பதிவு செய்து கணினிக்கு அனுப்பியது.
புதிய கருவியில் மனித முடியை விட மெல்லியதாக உள்ள இழைகள் இணைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு இழையிலும் இணைக்கப்பட்டுள்ள 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கேத்தோடுகள் (cathod) தகவல்களை பரிமாற்றம் செய்கின்றன. புதிய கருவியை மனித மூளைக்கும் பொருத்துவதற்கான இயந்திரத்தையும் நியூராலிங்க் வடிவமைத்துள்ளது. இந்த இயந்திரம் சில மணி நேரங்களில் அறுவை சிகிச்சை செய்து, மனித மூளைக்கும் பொருத்தும்.
இந்த கருவியை மேம்படுத்தி பார்கின்சன் நோய், வயது முதிர்வில் ஏற்படும் மூளை தொடர்பான நோய்கள், பார்வை குறைபாடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை சரி செய்ய முடியும் இலான் மஸ்க் தெரிவித்துள்ளார். மேலும் மூளையில் ஏற்படும் அதிர்வுகளை வைத்து கணினி உள்ளிட்ட மின்னணு சாதனங்களை இயக்க முடியும். எலோன் மஸ்க் நிறுவனத்தின் புதிய கண்டுபிடிப்பு மருத்துவ உலகில் புதிய அத்யாயத்திற்கு வித்திட்டுள்ளதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.