இந்தியாவிலேயே தமிழகத்தில் முதன் முறையாக புற்றுநோயை குணப்படுத்தும் அதிநவீன கதிர்வீச்சு சிகிச்சை மையத்தை தமிழக சுகாதாரத்துறை சார்பில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
புற்றுநோய் ஓர் உயிர் கொல்லி நோய். புற்றுநோயால் உயிரிழந்தவர்கள் ஏராளம். ஆனால் ஆரம்ப நிலையில் இதனை கண்டறிந்து உரிய சிகிச்சை பெற்று பயனடைந்தவர்கள் பலர் உண்டு. ஆண்டுக்கு புற்றுநோயால் பல லட்சம் பேர் பாதிக்கின்றனர். இந்த கொடிய நோயை குணப்படுத்த பல்வேறு முயற்சிகளை பல்வேறு நாடுகள் எடுத்து வருகிறது. தமிழக அரசும் பல்வேறு சிகிச்சைகளை அறிமுகப்படுத்தி புற்றுநோயாளிகளை வெகுவாக குறைத்து, இறப்பு விகிதத்தை குறைக்க முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்காக தமிழக சுகாதாரத்துறை, புற்றுநோய் சிகிச்சையை சென்னைக்கு மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தியுள்ளது.
இதில் முதற்கட்டமாக சென்னையில் ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்ஆகியோர் நேரில் திறந்து வைக்கின்றனர்.
இதனை தொடர்ந்து ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் உள்ள கதிர்வீச்சு சிகிச்சை மையத்தை காணொலி காட்சி மூலம் திறந்து வைக்கிறார். 6 கோடி ரூபாய் மதிப்பில் கதிர்வீச்சு புற்றுநோய் சிகிச்சை வளாகத்தையும், 22 கோடி ரூபாய் மதிப்பில் லீனியர் ஆக்சிலேட்டர் கருவி மற்றும் சி. டி. சிமுலேட்டர் கருவிகளையும் முதலமைச்சர் திறந்து வைக்கிறார்.
இந்தியாவில் முதன் முறையாக சர்வதேச தரத்தில் அனைத்து பாதிகாப்பு வசதிகளுடன் கூடிய, இந்திய அனுசக்தி ஆணையத்தின் அனுமதியுடன் கூடிய,அமெரிக்காவுக்கு இணையான அதிநவீன சிகிச்சை முறை வரும் டிசம்பர் மாதத்திற்குள் தமிழகத்தில் உள்ள 10 மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. விரைவில் சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களிலும் முதலமைச்சர் திறந்து வைப்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தின் 10 மாவட்ட அரசு மருத்துவமனைகளில் 28 கோடி மதிப்பில் கோபால்ட் அலகுகள் புற்றுநோய் சிகிச்சைக்காக நவீனப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், புற்றுநோயை குணப்படுத்த புற்றுநோய் அறுவை சிகிச்சை, கீமோதெரப்பி, ரேடியோ தெரப்பி என பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பது மட்டுமல்லாமல் அவர்களது இறுதி காலக்கட்டங்களில் அவர்களுக்கு ஆதரவு அளிப்பதிலும் அரசு சிறப்பு கவனம் செழுத்தி வருகிறது.இதுவரை 26 மாவட்ட மருத்துவமனைகளிலும், 6மருத்துவ கல்லூரிகளிலும் திறக்கப்பட்டுள்ளது. மேலும், 17 மருத்துவமனை கல்லூரிகளில் வரும் நிதியாண்டுக்குள் திறக்கப்படுத் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். இந்த மையங்களில் 1 மருத்துவர், 4 செவிலியர்கள், 2 மருத்துவ பணியாளர்கள் இருப்பார்கள்.
இதன் மூலம் சுகாதாரத்துறை இந்திய அளவில் முதன்மை மாநிலமாக தொடர்ந்து விளங்கிவருகிறது. மேலும் சுகாதாரத்துறையையும், முதலமைச்சரையும் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சரையும் மக்கள் தொடர்ந்து பாராட்டி வருகின்றனர்.