திருச்செந்தூர் முருகன் கோயிலில் கந்தசஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் கோலாகலமாக நடைபெற்றது.
யாகசாலை பூஜையுடன் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரத்திற்காக, திருச்செந்தூர் கடற்கரையில் எழுந்தருளிய முருகப் பெருமான், சூரனை வேல் கொண்டு வதம் செய்தார். முதலில் யானை முகம் கொண்டு வரும் தாரகாசூரனை முருகப் பெருமான் வதம் செய்தார்.
இதற்கு அடுத்தபடியாக, சிங்க முகம் கொண்டு உருமாறி வரும் சூரனை முருகப் பெருமான் வதம் செய்தார். இதை லட்சக்கணக்கான பக்தர்கள் பக்தி முழக்கத்துடன் கண்டு ரசித்தனர்.
மூன்றாவதாக, அகம்பாவத்தின் மொத்த உருவான சூரபத்மனை, முருக பெருமான் வதம் செய்த காட்சியை, அரோகரா முழக்கம் விண்ணை பிளக்க பக்தர்கள் கண்டு பரவசமடைந்தனர்.
இறுதியில் மாமரமும், சேவலுமாக உருமாறும் சூரனை, சேவலும், மயிலுமாக மாற்றி, முருகப் பெருமான் தன்னுடன் ஆட்கொள்கிறார். சேவலை தனது கொடியாகவும், மயிலை தனது வாகனமாகவும் மாற்றி ஆட்கொள்கிறார்.
புகழ்பெற்ற சூரசம்ஹார விழாவையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. நகரின் முக்கிய இடங்கள் உட்பட 70 கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்புப் பணி நடைபெற்றது. பாதுகாப்பு பணியில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். பக்தர்களின் வசதிக்காக தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் மாவட்ட நிர்வாகம் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தது.