திருத்துறைப்பூண்டி அருகே, மகன்களால் கைவிடப்பட்ட, 80வயது பாட்டி ஒருவரைத் தத்தெடுத்த குளித்தலை தம்பதியினர், அவருக்கு தீபாவளி பொருட்க்கள் கொண்டு வந்து கொடுத்த சம்பவம் மக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள மருதவனத்தை சேர்ந்தவர் பாக்கியம் பாட்டி.
சுமார் 80 வயதை நெருங்கும் பாட்டியின் கணவர் பொன்னுசாமி பலவருடங்களுக்கு முன்பே இறந்துவிட்டார். இவருக்கு மூன்று மகன்கள் இருந்தும் கடைசிகாலத்தில் யாரும் ஆதரவளிக்காததால் தனித்து விடப்பட்டு கூலி வேலை செய்து பிழைத்து வருகிறார். இந்நிலையில், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வீசிய கஜா புயலில், பாக்கியம் பாட்டியின் குடிசை வீடு முற்றிலுமாக பாதிக்கப்பட்டது.
புயல் பாதித்த வேளையில், மருதவனம் அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணிபுரியும் மதுரை மாவட்டத்தை சேர்ந்த அமுதா செல்வி என்பவர், தனது நண்பர்களிடம் நிவாரண பொருட்கள் சேகரித்துள்ளார். அப்போது தன்னை தொடர்புகொண்ட, கரூர் மாவட்டம் குளித்தலையை சேர்ந்த ஆசிரியர் பூபதி மற்றும் அவரது மனைவி பிருந்தா பூபதி ஆகியோரிடம், பாக்கியம் பாட்டியை பற்றி சொல்லியுள்ளார் அமுதா.
இதனையடுத்து, மருதவனம் வந்த பூபதி தம்பதியினர், பாக்கியம் பாட்டியை சந்தித்து தாயாக தத்தெடுத்து கொள்வதாக கூறியுள்ளனர். அதற்கு மகிழ்ச்சியுடன் சம்மதம் தெரிவித்த பாக்கியம் பாட்டியை தத்தெடுத்த பூபதி தம்பதியினர், அவருக்கு இதுநாள் வரை மாதம் மாதம் பணம் அனுப்பி வருவதோடு, தினமும் போனில் நலம் விசாரித்தும், அவ்வபோது நேரில் சந்தித்தும் வருகின்றனர். இந்த நிலையில், நேற்று தனது மனைவியுடன் தாங்கள் தத்தெடுத்த பாக்கியம் பாட்டியின் வீட்டிற்கு வந்த பூபதி அவருக்கு தீபாவளி பண்டிகைக்காக புதிய புடவை மற்றும் பழங்களை கொடுத்தார். பூபதி தம்பதியை பார்த்த பாட்டியின் கண்களிலோ அளவில்லா ஆனந்த கண்ணீர். இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர் நெகிழ்ச்சியில் ஆழ்ந்தனர்.
இதனையடுத்து, பாக்கியம் பாட்டி வாழ்ந்துவரும் ஓலைக் குடிசையை, தனது நண்பர்களின் உதவியுடன் புதிய வீடாக கட்டும் முயற்சியில் இருப்பதாக பூபதி கூறினார். மேலும், பூபதி தம்பதியினரின் இந்த முயற்சிக்கு அரசு உதவி செய்ய வேண்டும்
என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.