தாய்க்கு பதிலாக மாறுவேடத்தில் டிரைவிங் லைசென்ஸ் எடுக்க சென்ற மகன்

பிரேசிலில் டிரைவிங் லைசென்ஸ் எடுக்க தாய்க்கு பதிலாக மாறுவேடத்தில் சென்ற மகனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

பிரேசில் நாட்டிலுள்ள பரானா நகரை சேர்ந்தவர் டோனா மரியா. இவர் டிரைவிங் லைசென்ஸ் பெற விரும்பி அதற்கான சோதனையில் பங்கேற்றார். ஆனால் 3 முறை சோதனைக்கு சென்ற அவருக்கு ஒவ்வொரு முறையும் தோல்வியே ஏற்பட்டது. இதனால் மன வருத்தமடைந்த அவரது நிலையை அவரது மகன் ஹெய்ட்டரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதனால் அவர் தன் தாய்க்கு எப்படியாவது  டிரைவிங் லைசென்ஸ் வாங்கி கொடுக்கும் முடிவுக்கு வந்தார்.

அந்த முடிவுதான் அவரை வசமாக சிக்க வைத்தது. அதன்படி தன் தாய் அணிந்திருப்பதை போல உடை, நகை அணிந்து லைசென்ஸ் சோதனைக்கு புறப்பட்டார். அப்போது அங்கிருந்த அதிகாரி சோதனைக்கு வருபவர்களின் பட்டியலில் இருந்தவரின் புகைப்படமும், வந்திருப்பவரின் முகமும் வித்தியாசமாக இருப்பதை கண்டு ஹெய்ட்டரிடம் விசாரணை நடத்தினார். இதில் தாய்க்கு பதில் ஆள்மாறாட்டம் செய்து டிரைவிங் லைசென்ஸ் பெற வந்ததை ஒப்புக்கொண்டார். இதுகுறித்து அவரது தாயிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் தன் மகன், தனக்கு தெரியாமலேயே பாசத்தில் இப்படி செய்து விட்டதாக கூறியுள்ளார். இதுதொடர்பாக பிரேசில்  காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து ஹெய்ட்டரை கைது செய்தனர்.

Exit mobile version