சென்னையில் “சூது கவ்வும்” திரைப்பட பாணியில் தந்தையின் கடையில் மகனே கைவரிசை காட்டி சம்பவம் பெற்றோரிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது…
சென்னை சவுகார்பேட்டை என்.எஸ்.சி போஸ் சாலையில் சங்கம் கிராஃப்ட் என்ற தங்கநகை பட்டறையை ராஜ்குமார் மற்றும் சுபாஷ் போத்ரா ஆகியோர் இணைந்து நடத்தி வருகின்றனர். புதிய புதிய டிசைன்களில் நகைகளை வடிவமைத்து கடைகளுக்கு கொடுப்பது இவர்களது முக்கியத் தொழில்.
அதன்படி கடந்த 21ஆம் தேதி 14 கிலோ எடையுள்ள தங்க நகைகளை வாடிக்கையாளர்களுக்கு காட்டிவிட்டு லாக்கரில் பூட்டி விட்டு சென்றுள்ளனர். மீண்டும் வாடிக்கையாளர்களுக்கு காட்டுவதற்காக கடந்த 25ஆம் தேதி லாக்கரை திறந்துள்ளனர். உள்ளே இருந்த 14 கிலோ நகைகள் மாயமானதைக் கண்டு இருவரும் அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக யானைகவுனி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து பின் கடையில் பதிவாகி இருந்த செல்போன் சிக்னல்களையும் ஆய்வு செய்தனர். நகைக்கடை உரிமையாளர்களின் வீடுகளிலும், அவர்களின் உறவினர்களிடமும் தீவிர விசாரணை மேற்கொண்ட பின் 14 கிலோ நகைகளை திருடியவரை போலீசார் கண்டுபிடித்தனர்… அது வேறு யாருமில்லை, அந்த நிறுவனத்தின் உரிமையாளர்களில் ஒருவரான சுபாஷ் போத்ராவின் மகன் ஹரீஷ் போத்ரா தான்…
ஹரீஷ் போத்ராவை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தியதில், தான் ஆன்லைன் டிரேடிங் தொழில் நடத்தி அதில் நஷ்டம் அடைந்ததால், அதை ஈடுகட்டவே சொந்த கடையில் திருடியதாக ஒப்புக்கொண்டார்… ஹரீஷ் போத்ராவிடமிருந்து 14 கிலோ தங்க நகையை போலீசார் பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.
“சூது கவ்வும்” படத்தில் அமைச்சர் மகன் தன்னை தானே கடத்தி வைத்து கொண்டு தந்தையிடமே பணத்தை மிரட்டி வாங்குவார். அதைப்போல தந்தையின் கடையிலேயே மகன் ஹரீஷ் போத்ரா கைவரிசை காட்டியதாக போலீசார் தெரிவித்தனர்.