சொத்துக்காக மாமியாரை சொந்த மருமகனே குத்தி கொன்றது திண்டிவனத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது… இது குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு…
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் சந்தைமேடு பகுதியை சேர்ந்த சிவபிரகாசம் என்பவரின் மனைவி பானுமதி (54). இவருக்கு சாந்தி என்ற மகளும் பாலாஜி என்ற மகனும் உள்ளனர்.
பானுமதி தன்னுடைய மகள் சாந்தியை உறவினர் மகன் முருகானந்தம் என்பவருக்கு 13 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து வைத்தார்.மருமகன் முருகானந்தத்தையும் தங்கள் வீட்டிலேயே மகளுடன் குடித்தனம் வைத்துள்ளார் பானுமதி. முருகானந்தம் கோழி கறி கடை மற்றும் கோழி கறி பகோடா கடையையும் நடத்தி வந்தார்.
முருகானந்தம் தன் மனைவி சாந்தியிடம் அடிக்கடி சொத்தில் பங்கு கேட்டு தகராறு செய்வார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் சொத்தில் பங்கு கேட்டு முருகானந்தம் தன் மனைவி சாந்தியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.இதனை பார்த்த மைத்துனர் பாலாஜி ஏன் அடிக்கடி சொத்துக்காக சண்டை போடுறீங்க என தட்டிக் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த முருகானந்தம் மைத்துனர் பாலாஜியை கத்தரிக்கோலால் சரமாரியாக பலர் இடங்களில்குத்தினார். இதை தடுத்த மாமியார் பானுமதியை நீ உயிரோடு இருந்தால் எனக்குசொத்து கிடைக்காது என கத்திரிக்கோலால் கழுத்தில் குதியிருக்கிறார்.
பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் பானுமதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அங்கு இருந்து முருகானந்தம் சம்பவ இடத்தை விட்டு தப்பியோடி விட்டார்.
தகவலறிந்தவுடன் ரோசனை காவல்துறையினர் பாலாஜியை மீட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் பானுமதி பிரேதத்தை கைப்பற்றி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகிறார்கள். தகராறில் மாமியாரை மருமகன் குத்திக்கொன்றது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.