குடிநீர் தட்டுப்பாட்டை போக்க சென்னை குடிநீர் வழங்கல் வாரியம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், பொதுமக்களுக்கும் சில வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டுள்ளன. நீரை சிக்கனமாக பயன்படுத்தி நாளொன்றுக்கு 300 லிட்டர் தண்ணீரை சேமிக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை தற்போது பார்க்கலாம்.
தினந்தோறும் நாம் குளியலுக்கு பயன்படுத்தும் நீர் தெளிப்பானில் குறைந்தது 100 லிட்டர் தண்ணீர் செலவாகிறது. அதற்கு பதிலாக வாளியை பயன்படுத்தினால் 18 லிட்டர் நீரே செலவாகும். இதன் மூலம் 82 லிட்டர் நீரினை சேமிக்க இயலும்.
கழிப்பறை உபயோகத்திற்காக தானியங்கி மூலம் தண்ணீர் பயன்படுத்தினால் குறைந்தது 20 லிட்டர் தண்ணீர் செலவாகிறது. மாறாக வாளியை பயன்படுத்தினாள் 6 லிட்டர் மட்டுமே செலவாகும். இதன் மூலம் 14 லிட்டர் தண்ணீர் சேமிக்கப்படும்.
துணி துவைக்க ஓடும் குழாய்களில் 116 லிட்டர் தண்ணீர் செலவாகிறது. இதற்கு மாறாக வாளியில் பிடித்து உபயோகித்தால் 36 லிட்டர் தண்ணீர் மட்டுமே செலவாகும். இதன் மூலம் 80 லிட்டர் தண்ணீரை நாம் சேமிக்கலாம்.
வாகனங்கள் கழுவ ஓடும் குழாயில் இருந்து 100 லிட்டர் தண்ணீர் செலவாகிறது. இதற்கு பதிலாக வாளியை பயன்படுத்தினால் 18 லிட்டர் தண்ணீரே செலவாகும். இதன் மூலம் 82 லிட்டர் தண்ணீர் சேமிக்கப்படும்.
பல் துலக்குவதற்கு ஓடும் குழாயை பயன்படுத்தினால் 5 லிட்டர் தண்ணீர் வீணாகிறது. குவளையை பயன்படுத்தினல் 750 மில்லி லிட்டர் தண்ணீர் மட்டுமே செலவாகும். இதன் மூலம் 4.25 லிட்டர் தண்ணீர் சேமிக்கப்படும்.
முகச்சவரம் செய்ய ஓடும் குழாயை பயன்படுத்தினால் 5 லிட்டர் தண்ணீர் செலவாகிறது. மாறாக குவளையை பயன்படுத்தினால் 750 மில்லி லிட்டர் தண்ணீர் மட்டுமே செலவாகும். இதன் மூலம் 4.25 லிட்டர் தண்ணீர் சேமிக்கப்படும்.
நமது இல்லத்தில் செடி தொட்டிகளுக்கு குழாய் மூலம் தண்ணீர் விடும்போது 50 லிட்டர் வரை தண்ணீர் செலவாகிறது. இதற்கு மாறாக வாளியை பயன்படுத்தினால் 10 லிட்டர் தண்ணீர் மட்டுமே செலவாகும். இதன் மூலம் 40 லிட்டர் வரை தண்ணீர் சேமிக்க முடியும்.
தோட்டத்தில் உள்ள செடிகளுக்கு குழாய் மூலம் தண்ணீர் பாய்ச்சும் போது 100 லிட்டர் வரை தண்ணீர் செலவாகிறது. மாறாக நீர் தெளிப்பான் மூல தண்ணீர் விட்டால் 25 முதல் 30 லிட்டர் வரை மட்டுமே தண்ணீர் செலவாகும். இதன் மூலம் 70 முதல் 75 லிட்டர் வரை தண்ணீர் சேமிக்கப்படும்.
இப்படி வாளி மற்றும் குவளையை பயன்படுத்தி தண்ணீரை சேமிக்க முற்படும்போது ஒரு குடும்பம் நாளொன்றுக்கு சராசரியாக 300 லிட்டர் வரை நீரை செமிக்க முடியும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.