உலகில் யாருக்கும் தெரியாத நிலவின் தென் துருவ ரகசியங்களையும், நிலவில் தண்ணீர் இருப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்கும் சந்திரயான்-2 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. இந்த விண்கலத்தின் ஆராய்ச்சிக்காக பொறுத்தப்பட்டுள்ள கருவிகளின் சிறப்புகளை தற்போது பார்க்கலாம்…
நிலா குறித்த ஆய்வுகளை மேற்கொள்ள கடந்த 2008 ஆம் ஆண்டு சந்திரயான் விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. ஓராண்டு காலம் ஆய்வில் ஈடுபட்ட அந்த விண்கலம் தான் நிலாவில் தண்ணீருக்கான மூலக்கூறுகள் இருப்பதை முதன் முதலில் கண்டுபிடித்து உலகிற்கு அறிவித்தது.
அடுத்தகட்டமாக நிலவில் ஆய்வு நடத்தவும், அதிலும் நிலவின் மேற்பரப்பில் தரையிறங்குவதோடு, அதன் தரையில் ஊர்ந்து சென்று ஆய்வு செய்யும் வகையில் சந்திரயான்-2 திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
978 கோடி ரூபாய் செலவிலான இந்த திட்டத்தில் விண்கலங்களை விண்ணுக்கு சுமந்து செல்லும் ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 ராக்கெட் மட்டுமே 338 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ளது.
இது தவிர நிலாவை சுற்றி வந்து ஆராயும் சந்திரயான்-2, நிலாவில் தரையிறங்கும் விக்ரம் கலம், விக்ரம் கலத்தில் இருந்து பிரிந்து நிலாவின் ஊர்ந்து சென்று ஆராயும் பிரக்யான் கலன் ஆகியவை 640 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ளன.
4 டன் எடையை சுமந்து செல்லும் திறன் கொண்ட மார்க் 3 ராக்கெட் மூலம் சந்திரயான்-2 விண்கலம் ஏவப்பட்டுள்ளது.
2,310 கிலோ எடை கொண்ட சந்திரயான் அடுத்த ஓராண்டு காலம் நிலவை வலம் வந்து ஆராயும்.
இந்த ஆய்வுப் பணிக்கு ஏற்ற வகையில், தரையின் மேற்பரப்பை ஊடுருவி ஆராயும் எக்ஸ்ரே ஸ்பெக்ட்ரோமீட்டர் கருவி பொறுத்தப்பட்டுள்ளது.
நிலவின் பரப்பில் உள்ள தனிமங்களை கண்டறிய சூரிய சக்தி மூலம் இயங்கும் எக்ஸ்ரே கண்காணிப்பு கருவி, குறுகிய மற்றும் நீண்ட அலைவரிசை ரேடார் ஆகியவையும் பொறுத்தப்பட்டுள்ளன.
நிலவின் அணுக்கூறுகளை அளவிட அகச்சிவப்புக் கதிர்வீச்சு கருவிகள், நிலவின் சூரியக் கதிர் அளவை ஆராயும் மாஸ் ஸ்பெக்ட்ரோ மீட்டர், நிலாவின் பரப்பை முப்பரிமாணத்தில் படம் எடுக்கும் 3-டி கேமிரா ஆகியவையும் இந்த செயற்கைகோளில் பொறுத்தப்பட்டுள்ளன.
இவற்றுடன் மிக முக்கியமாக நிலவின் தண்ணீர் மூலக்கூறுகளை கண்டறிய உதவும் கருவியும் இணைக்கப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்தமாக 8 கருவிகள் சந்திரயான் -2 செயற்கைகோளில் உள்ளன.
நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்யும் முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற உள்ளது.
விக்ரம் கலம் நிலவின் தென் துருவத்தில் மன்சூனு சி மற்றும் சிம்பெலஸ் என் என்ற இரு பெரும் பள்ளத்தாக்குகளுக்கு இடையே தரையிறகுகிறது.
நிலவில் தரையிறங்கி ஆய்வு செய்யும் விக்ரம் கலம், தான் தரையிறங்கிய 15-வது நொடியிலிருந்து புகைப்படங்களை பூமிக்கு அனுப்பும் திறன் கொண்டது.
940 கிலோ எடை கொண்ட அந்த கலம் 450 வாட்ஸ் மின்சக்தியை சூரிய ஒளியில் இருந்து தயாரிக்கும் திறன் கொண்டது.
நிலவின் தரையில் ஊர்ந்து சென்று ஆய்வு செய்யும் பிரக்யான் கலம் 25 கிலோ எடைக் கொண்டது.
பிரக்யான் கலம் நிலவில் 500 மீட்டர் மட்டுமே பயணிக்கும்.
அணுக்களை ஆராயும் நிறமாலைக் கருவி, நீர்ம மூலக்கூறுகளை கண்டறியும் சக்திவாய்ந்த எக்ஸ்-ரே கருவி ஆகியவை இதில் இருக்கும்.
சந்திரயான் -2 பயணத்தின் மூலம் தண்ணீர் மூலக்கூறு ஆராய்ச்சி தவிர, நிலவில் உள்ள தனிமங்கள், வேதியல் பொருட்கள், தட்ப, வெப்ப நிலை, நிலவின் வெளிப்பரப்பு மற்றும் அதில் நிகழும் மாற்றங்கள் குறித்தும் ஆய்வு நடத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.