வானில் தோன்றும் அதிசய நிகழ்வான நெருப்பு வளைய சூரிய கிரகணம் தமிழகம் உட்பட இந்தியாவில் பல இடங்களில் தென்பட தொடங்கியது. சுமார் 8 மணியளவில் தொடங்கிய இந்த சூரிய கிரகணம் 11.30 மணி வரை நீடிக்கும் என்றும் நீலகிரி மாவட்டம் உதகையில் மட்டும் சூரிய கிரகணத்தை முழுமையாக பார்வையிடலாம் என்று கூறப்படுகிறது.
சூரிய கிரகணத்தை ஒட்டி, திருப்பதி ஏழுமலையான் கோவில், 13 மணி நேரம் மூடப்பட்டுள்ளது. இன்று காலை, 8 மணி முதல், 11 மணி வரை சூரிய கிரகணம் நிகழ உள்ளதால், நேற்றிரவு, 11:00 மணிக்கு கோவில் நடை சாத்தப்பட்டது. இதனை தொடர்ந்து, திருமலையில் உள்ள அன்னதான கூடம், தரிசன வரிசைகள், காத்திருப்பு அறைகள், லட்டு மற்றும் பிரசாதம் தயாரிக்கும் மடப்பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. மேலும் சூரிய கிரகணம் முடிந்து, இன்று நண்பகல், 12 மணிக்கு, கோவில் நடை திறக்கப்படும். அதன்பின், சுமார் 2 மணியளவில், பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சபரிமலை ஐயப்பன் கோவில், மதுரை மீனாட்சியம்மன் கோவில், ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவில் உள்ளிட்ட அனைத்து கோவில்களின் நடைகளும் சாத்தப்பட்டுள்ளது.