கன்னியாகுமரியில் உள்ள மன்னர் கால சாலையோர கல்மண்டபங்களை புனரமைத்து பாதுகாக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் வரலாற்று பெருமைகளுக்கு சான்றாக பல்வேறு இடங்களில் கல் மண்டபங்கள் காட்சித் தருகின்றன. நூற்றாண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட இந்த கல் மண்டபங்கள், நெடுந்தூரம் நடந்து செல்லும் பயணிகள் ஓய்வெடுப்பதற்காக கட்டபட்டன. இங்கு பயணிகளுக்கு உணவுகள் வழங்கபட்டதோடு மருத்துவ வசதிகளும் செய்யப்பட்டன.
மாநில, தேசிய நெடுஞ்சாலையோரம் பல நூற்றாண்டுகளை கடந்து இன்றும் காணப்படும் இந்த கல்மண்டபங்கள், புற்களும், புதர்களும் மண்டி சிதிலமடைந்து காட்சியளிக்கின்றன, மேலும் இரவு நேரங்களில் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளதாகவும், எனவே கல்மண்டபங்களை புனரமைத்து பாதுகாக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திற்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.