நாமக்கல் அருகே காவிரியாற்றில் தொடரும் மணல் கொள்ளையை தடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் மணப்பள்ளி பகுதியில் காவிரி ஆற்றில் இரவு, பகல் என தொடர்ந்து மணல் கொள்ளை நடைபெற்று வருகிறது. இந்த மணல் கொள்ளையில் ஈடுபடும் கும்பல், மணலை மூட்டைகளில் கட்டி இரு சக்கர வாகனங்கள் மூலம் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர். மணல் கொள்ளையில் ஈடுபடும் கும்பல், ஆற்றின் ஓரத்தில் குழிகள் தோண்டுவதால், பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் நிலை ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக, அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தாலும், சில நாட்கள் அமைதியாக இருக்கும் கொள்ளை கும்பல், மீண்டும் மணல் கொள்ளையை தொடங்கி விடுகின்றனர். இதனால், தமிழக அரசின் மணல் குவாரிக்கு வருவாய் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, தொடர் மணல் கொள்ளையை தடுக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.