மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி அவரின் 2 வயது முதல் 68 வயது வரையிலான புகைப்படங்களை சமூக ஆர்வலர் ஒருவர் காட்சிப்படுத்தியுள்ளது, பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 72 வது பிறந்த நாளையொட்டி, சென்னை பாரிமுனையில், புகைப்பட சேகரிப்பாளர் ஆனந்த் என்பவர் ஜெயலலிதாவின் புகைப்பட கண்காட்சி ஒன்றை பொதுமக்கள் பார்வைக்கு வைத்துள்ளார்.
இதில், ஜெயலலிதாவின் 2 வயது குழந்தை புகைப்படம் முதல் 68 வயது வரையிலான புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ளன. ஜெயலலிதாவின் பள்ளி பருவ புகைப்படங்கள், அவர் திரைத் துறைக்கு வந்த புகைப்படங்கள், திரைப் பிரபலங்கள் மனோராமா, கே.பி.சுந்தராம்பாள் உள்ளிட்டோருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும் ஜெயலிதாவின் அரசியல் பிரவேச புகைப்படங்களும் இடம்பெற்றன. மேலும், மறைந்த தலைவர்களான இந்திரா காந்தி, ராஜீவ்காந்தி, மற்றும் நடிகர் சிவாஜிகணேசன் போன்றோருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டதையொட்டி பலரும் ஆர்வமுடன் பார்வையிட்டு செல்கின்றனர்.