ராசிபுரத்தில் குழந்தைகள் விற்பனை விவகாரத்தில் இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 3 பேரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பச்சிளம் குழந்தைகளை விற்பனை செய்த விவகாரத்தில் செவிலியர் அமுதா, அவரது கணவர் ரவிச்சந்திரன் மற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முருகேசன் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து, கொல்லிமலை பகுதியில் 10 குழந்தைகளை வாங்கி அமுதாவிடம் விற்றதாக ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முருகேசன் வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து, குழந்தைகளை விற்றதாக பர்வீன், நிஷா, அருள்சாமி ஆகிய 3 பேரை ராசிபுரம் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். சுகாதாரத்துறை சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில் 20 குழந்தைகள் விற்கபட்டது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, மாவட்ட தாய்சேய் நல அலுவலர் தேவி தலைமையில் 15 செவிலியர்கள் கொண்ட சிறப்பு குழு அமைக்கப்பட்டது. தொடர்ந்து 4வது நாளாக இன்றும் விசாரணை நடைபெற்று வரும்நிலையில், குழந்தை விற்பனை தொடர்பாக செல்வி, பாலாமணி, தமிழ்செல்வி ஆகிய 3 பேரிடம் தீவிரவிசாரணை நடைபெற்று வருகிறது.