மக்களவை தேர்தலையொட்டி தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பறக்கும்படையினர் நடத்திய வாகன தணிக்கையில் இதுவரை ரூ.4.14 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார்
மக்களவை தேர்தல் தமிழகத்தில் ஏப்ரல் 18ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. இதனையொட்டி, பணப்பட்டுவாடா உள்ளிட்டவைகளை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. அதனடிப்படையில் தமிழகம் முழுவதும் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். உரிய ஆவணங்களின்றி ரூபாய் 50 ஆயிரத்திற்கும் மேல் எடுத்துச்சென்றால் பணம் பறிமுதல் செய்யப்படும் என்று தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்துள்ளது. இந்த நிலையில், தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பறக்கும் படையினர் நடத்திய வாகன தணிக்கையில் இதுவரை, உரிய ஆவணங்களின்றி எடுத்துச்செல்லப்பட்ட 4 கோடியே 14 ஆயிரம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர். இதையடுத்து, பறிமுதல் செய்யப்பட்ட பணம் அந்தந்த மாவட்ட அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.