மரகத நடராஜர் சிலையை திருட மர்ம நபர்கள் முயற்சி -போலீசார் விசாரணை

உத்திரகோசமங்கை கோயிலில் உள்ள புகழ்பெற்ற மரகத நடராஜர் சிலையை திருட நடைபெற்ற முயற்சி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள உத்திரகோசமங்கையில் மிகப் பழமையான மங்களநாத சுவாமி, மங்களேஸ்வரி தாயார் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் புராணகால தொடர்புடையது என நம்பப்படுகிறது. இக்கோயிலில் உள்ள மரகத நடராஜர் சிலை மிகவும் புகழ்பெற்றதாகும்.

வெளிச்சம் மற்றும் அதிர்வுகளில் இருந்து மரகத சிலை சேதமடையாமல் இருக்க, ஆண்டு முழுவதும் சந்தனம் பூசப்பட்டநிலையில் பாதுகாப்பாக இருக்கும். வருடத்தில் ஒருநாள் ஆருத்ரா தரிசனத்திற்கு முன்பாக, திருவாதிரைக்கு முதல்நாள் சந்தனக் காப்பு களையப்படும்.

பிரசித்தி பெற்ற இந்த மரகத நடராஜர் சிலையை திருட மர்ம நபர்கள் முயற்சித்துள்ளனர். கோயிலில் உள்ள அபாய எச்சரிக்கை மணி ஒலித்ததால், சிலை திருட்டு சம்பவம் தடுக்கப்பட்டுள்ளது. தப்பியோட முயன்ற கொள்ளையர்கள் கோயில் காவலாளியை தாக்கிவிட்டு தலைமறைவாகி உள்ளனர். சம்பவம் குறித்து போலீசார், விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Exit mobile version