தோனியின் மந்திரப்புன்னகை – ரசிகர்களை ரசிக்க வைத்த பி.சி.சி.ஐ யின் பதிவு!

தோனி, கிரிக்கெட் களத்திலும், நிஜ வாழ்விலும் தனக்கென ஒரு பாதையை வகுத்து அதன் வழியே பயணிப்பவர். சாதாரண ரசிகனுக்கு மட்டுமல்ல, பல பிரபலங்களுக்கும் அவர் முன்னோடியாக திகழ்கிறார். அவர் படைக்காத சாதனைகள் இல்லை எனும் அளவிற்கு அனைத்து விதமான சாதனைக்கோப்பைகளையும் இந்தியாவிற்கு வென்று தந்துள்ளார். அப்படிப்பட்ட தோனியை அனைவரும் கடைசியாக களத்தில் கண்டது, 2019-ல் நியூசிலாந்துக்கு எதிரான உலக கோப்பை அரையிறுதி ஆட்டத்தில்தான். அந்த இரு இன்ச்களை அவர் தொட முடியாமல் அவுட் ஆனபோது அதிர்ச்சி அடைந்தது ரசிகர்கள் மட்டுமல்ல, அம்பயரும் கூடதான். அதன்பிறகு தோனியை களத்தில் காண அவரது ரசிகர்கள் தவம் கிடந்தார்கள் என்றே சொல்லலாம், அந்த அளவுக்கு கிரிக்கெட்டை விட்டு தோனி ஒதிங்கியும், ஒதுக்கியும் வைக்கப்பட்டார். “தோனி ஓய்வை அறிவிக்கவேண்டும், அவரின் ஆட்டத்திறன் குறைந்துவிட்டது, வயதாகிவிட்டது” இப்படி ஏகப்பட்ட சர்ச்சைகள் அவரை சுற்றிய வண்ணம் இருந்தது. இவை அனைத்துக்கும் தோனி எப்படி பதில் அளிப்பார் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே.

சமீபத்திய எந்த ஒரு தொடரிலும் இந்தியாவிற்கான அணியில் தோனியின் பெயர் இடம்பெறவேயில்லை, இது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவற்றையெல்லாம் தாண்டி, ஐ.பி.எல்-ல் அவரது ஆட்டத்தை காணலாம் என காத்திருந்த ரசிகர்களுக்கு, சென்னையில் தோனியும், சி.எஸ்.கே அணியின் வீரர்களும் பயிற்சி மேற்கொண்டது சிறிது ஆறுதலாக அமைந்தது.

இந்நிலையில் அவர்களுக்கு பேரிடியாக அமைந்ததுதான் கொரோனா. ஐ.பி.எல் தொடர் தற்போது நடைபெறுமா என்பது சந்தேகமே?. தோனி ஐ.பி.எல்-ல் தன்னை நிரூபிக்கும் பட்சத்தில், எதிர்வரும் டி-20 உலககோப்பை அணியில் இடம்பெற வாய்பிருப்பதாக நம்பிய ரசிகர்களுக்கு அது அதிர்ச்சியாகவே அமைந்தது.  மேலும் பி.சி.சி.ஐ நிர்வாகம் தோனி பற்றிய எந்த ஒரு தெளிவான நிலைப்பாட்டையும் தெரிவிக்காமல் குழப்பத்திலேயே இருந்தது. இந்நிலையில், தோனியின் சேவை இனி இந்திய அணிக்கு தேவையிருக்காது என இந்தியாவின் முன்னால் துவக்க வீரர் சேவாக் கருத்து தெரிவித்தது தோனியின் ரசிகர்களை கொதிப்படையச் செய்தது.


பில்லியன் மக்களின் கனவை நிறைவேற்றிய வீரருக்கு, சரியான முறையில் பிரிவு உபச்சார விழா நடத்தவேண்டும், அவரது திறமையை இன்னும் பயன்படுத்த வேண்டும் போன்ற பல்வேறு கருத்துக்களை சில முன்னால் இந்திய வீரர்களும், பல ரசிகர்களும் தெரிவித்தனர்.

இந்த சமயத்தில் பி.சி.சி.ஐ தனது டிவிட்டர் பக்கத்தில் தோனியின் பழைய புகைப்படம் ஒன்றை வெளியிட்டது. அதில், “Smile is the way to be ??”

“புன்னகைதான் வழி” என்று பதிவிட்டு டிவீட் செய்துள்ளது. இப்புகைப்படத்தை டிவிட்டரில் 52,800 பேர் லைக் செய்தும், 4,800 பேர் ரி-டிவீட் செய்தும் ட்ரெண்டாகி வருகிறது. மேலும், ரசிகர்கள் பலர் தோனியின் வருகைக்கான சமிக்ஞையாக இது இருக்குமோ என கமெண்ட் செய்து தங்களது சந்தோஷத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். வெகுநாட்கள் கழித்து தோனி பற்றிய ஒரு கருத்தை பி.சி.சி.ஐ பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது அவர், அணிக்கு திரும்புவதற்கான முன்னோட்டமா என்பதை பொறுத்திருந்து தான் நாம் பார்க்கவேண்டும். தோனி அணிக்கு திரும்பும் பட்சத்தில், அவரது பழைய ஆட்டத்தை காணவும் “தோனி தோனி” என்று அரங்கம் அதிர ஆரவாரம் செய்யவும், அனைவருமே காத்திருக்கின்றனர்.

Exit mobile version