அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் போன்!!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அரசுப் பள்ளி தலைமையாசிரியர் ஒருவர், பள்ளியில் சேரும் அனைத்து மாணவர்களுக்கும் இலவசமாக செல்போன் வழங்கி அசத்தி வருகிறார். ஆன்லைன் கல்வி அவசியமாகி விட்ட இக்காலகட்டத்தில், பாடங்களை படிக்க வசதியாக செல்போன்களை வழங்கி வரும் தலைமை ஆசிரியருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் பள்ளிகள் திறப்பதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. இந்நிலையில் பல்வேறு தனியார் பள்ளிகளும் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளைத் துவங்கியுள்ளன. வசதி படைத்த மாணவர்கள் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தி வகுப்புகளில் கலந்து கொள்கின்றனர். ஆனால் வசதி குறைந்த, செல்போன் எட்டாக் கனியாகவுள்ள மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் என்பது கனவாகவே உள்ளது.

இத்தகைய மாணவர்களுக்கு உதவி செய்துள்ளார் அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவர், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள சிறிய கிராமம் படிக்காசுவைத்தான்பட்டி. இங்குள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியாக பணியாற்றி வருகிறார் ஜெயக்குமார் ஞானராஜ். பெரும்பாலன மக்கள் கூலித் தொழிலாளர்களாவே உள்ள நிலையில், அவர்களது குழந்தைகளுக்கு உதவ முடிவு செய்தார் ஞானராஜ். அதன்படி தொடக்கப் பள்ளியில் சேரும் மாணவர்கள் அனைவருக்கும் செல்போன்கள் வழங்கி வருகிறார். இதன்மூலம் மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளை தவறாமல் கலந்து கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவிக்கிறார்

ஜெயக்குமார் ஞானராஜூக்கு தமிழக அரசு ஏற்கனவே நல்லாசிரியர் விருது வழங்கி கெளரவித்துள்ளது. தலைமை ஆசிரியருக்கு நன்றி தெரிவித்துள்ள பெற்றோர், இதன்மூலம் தங்கள் குழந்தைகள் ஆன்லைன் வகுப்புகளில் எளிதாக கலந்து கொள்ள முடியும் எனத் தெரிவித்தனர். ஆசிரியரின் தன்னலமற்ற பணியை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்

Exit mobile version