ஈரோடு மாவட்டம் திம்பம் மலைப்பாதையில் இரவு நேரங்களில் சிறிய ரக வாகனங்கள் செல்ல அனுமத்திக்க வேண்டும் என வனத்துறைக்கு ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திண்டுக்கல் – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தமிழகத்திலிருந்து கர்நாடக மாநிலத்தை இணைக்கும் முக்கிய சாலையாக உள்ளது. அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ள, திம்பம் மலைப்பாதையில் 27 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. இந்த மலைப்பாதை வழியாக இருமாநில பேருந்துகள், சுற்றுலா வாகனங்கள், கனரக வாகனங்கள் இயக்கப்பட்டு வந்தன.
ஆனால், அதிக எடை கொண்ட சரக்கு லாரிகளால் போக்குவரத்து பாதிக்கப்படுவதால், ஜனவரி 1ம் தேதி முதல் மாலை 6 முதல் காலை 6 மணி வரை சரக்கு லாரி, கார், வேன் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகி வருவதாகவும், இரவு நேரங்களில் சிறிய ரக வாகனங்களை வனத்துறை அனுமதிக்க வேண்டும் என ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.