சிவகங்கை மாவட்டம் கொந்தகையில் அகழாய்வு நடைபெறும் பகுதிக்கு அருகில் தாழிப்பானையுடன் மனித எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கீழடி மற்றும் கொந்தகை அகழாய்வு பணிகளுக்கு நிலத்தை வழங்கிய கதிரேசன் மற்றும் அவரது சகோதரர்கள், அகழாய்வு நடைபெறும் இடத்தின் அருகே, தென்னை கன்றுகள் நடுவதற்காக குழிகள் தோண்டும் பணியில் ஈடுபட்டனர். அப்போது சுமார் 4 அடி ஆழத்தில் முதுமக்கள் தாழியில் எலும்புக்கூடு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து குழிக்குள் இறங்கிய ஆராய்ச்சியாளர்கள்,
தாழிப்பானையில் இருந்த மண்டையோடு, எலும்பு, கை, கால் பகுதிகள் மற்றும் கருப்பு சிவப்பு வர்ணங்களால் ஆன சிறிய அளவு மண்பானைகள் மற்றும் மண்பானை மூடுவதற்கு பயன்படுத்தக்கூடிய சுடுமண்ணால் ஆன மூடி ஆகிய பொருட்களை எடுத்தனர். கண்டெடுக்கப்பட்டுள்ள எலும்புக்கூடு, மண்டையோடு ஆகியவை ஆய்வுக்குப் பிறகு எத்தனை வருடங்களுக்கு முந்தையது என தெரியவரும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.